ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசனாகவும், தற்போதைய ஐந்தாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர். இந்த ஐந்தாவது சீசனும் கடந்த சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கி உள்ளது.
இதுவரை 50 நாட்கள் கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதியில் அந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற அறிவிப்பை நடிகர் கமலஹாசனே அறிவிப்பார். மேலும் போட்டியாளர்கள் செய்த செயல்களை விமர்சிப்பார். வாராவாரம் ஒரு சிறப்பு தகவலையும், சிறந்த புத்தகங்களையும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் பரிந்துரைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி வந்தபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதன் பிறகு அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் நேற்று உறுதிப்படுத்தினார். நடிகர் கமல்ஹாசன் தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் கமல் அவர்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரம் நடத்த முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதியோ அல்லது நடிகை ஸ்ருதி ஹாசனோ தொகுத்து வழங்கலாம் என பிக்பாஸ் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வது குறித்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.