பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை மீறலை சித்தரித்து உருவான படம் ஜெய்பீம்.
சூர்யா தயாரித்து இந்த திரைப்படம் குறித்து படத்தை பாராட்டி முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த திருமாவளவனுக்கு பதில் அளித்த நடிகர் சூர்யா, “திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன. மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தங்கள் குறிப்பிட்டதைப் போல, மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனபடுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. அன்புடன், சூர்யா” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ரியாக்ட் செய்த திருமாவளவன், “கலைநாயகன் சூர்யா அவர்கள், பழங்குடியினரின் உரிமைப்போராளி #BirsaMunda பிறந்தநாளில் எமக்கு நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. பொறுமையும் சகிப்புத்தன்மையும் தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள். போராளி சூர்யாவுக்கு எமது வாழ்த்துகள்.” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஜெய்பீம் படம் கலவையான விமர்சனங்களை பல்வேறு தரப்பில் இருந்தும் பெற்றுவரும் நிலையில், இணையவாசி ஒருவர், தமது ட்வீட்டில், திரௌபதி படத்தில் திருமாவளவனை சித்தரிக்கும் கதாபாத்திரம் வைத்திருந்ததையும், ஆனால் அப்படம் பார்க்காததால், அதுபற்றி கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று திருமாவளவன் கூறியதையும் சுட்டிக்காட்டி இவ்விஷயத்தை பெரிதுபடுத்தாததுதான் திருமாவளவனின் தலைமைப்பண்பு என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த விசிக தலைவர் திருமாவளவன், “கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். திருமாவளவனின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.