சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு குரலில் கடந்த ஆண்டு ‘என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் வெளியானது.
ஆதி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடலாக இப்பாடலை அறிவு உருவாக்கி இருந்தார். உலகமெல்லாம் இருக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடலில் வரும் வள்ளியம்மாள் ‘தெருக்குரல்’ அறிவின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் இந்த பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் மாஜா யூ-ட்யூப் தளத்தில் வெளியிட, பின்னாட்களில் இப்பாடல் பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. உலகமெங்கும் ஹிட் அடித்த இந்த பாடல் பல்வேறு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது.
அந்த வகையில் சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க, இவர்கள் முன்னிலையில் நடந்த சென்னையில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாள் பாடி பெர்ஃபார்ம் பண்ணியிருந்தார்கள்.
ஆனால் இந்த நிகழ்வில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு தோன்றாதது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பேச்சுகள் சலசலக்கத் தொடங்கியது, இந்நிலையில் இது தொடர்பாக தெருக்குரல் அறிவு தற்போது தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு விளக்க பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த பாடலை எழுதி, இசையமைத்து நான் பாடினேன். இப்பாடலை எழுந்த எனக்கு யாரும் ஒரு டியூனோ, மெலடியோ அல்லது வரிகளோ கொடுக்கவில்லை. சுமார் 6 மாதங்களாக தூங்காமல், மன அழுத்தம் நிறைந்த இரவு பகலுக்கு நடுவில் நான் உழைத்தேன். எனினும் இப்பாடல் அனைவரின் கூட்டு முயற் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இப்பாடல் வள்ளியம்மாளின் வரலாறோ அல்லது நிலமில்லாத தேயிலைத் தோட்ட அடிமைகளாக என் முன்னோர்களை காட்டும் வரலாறோ இல்லை. என் ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறையினரின் ஒடுக்குமுறை குறித்த அடையாளம். இப்படி இந்நாட்டில் 10,000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.
இது என் முன்னோர்களின் மூச்சு, வலி, வாழ்க்கை, அன்பு, எதிர்ப்பு குறித்த பாடல். பல தலைமுறைகளின் வியர்வையும் இரத்தமும் கலந்த வலி இந்த பாடல். நம் மரபுகளைப் இப்பாடலில் எடுத்துச் செல்கிறோம். நீங்கள் தூங்கும்போது உங்களுடைய சொத்தினை யாராவது எடுத்துச் செல்ல முடியும். ஆனால், விழித்திருக்கும்போது முடியாது. ஜெய்பீம். இறுதியில் உண்மையே வெல்லும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்றி. இந்த ஸ்பெஷல் பாடல் தொடர்பில் யாருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு முற்றிலும் நான் தயாராக இருக்கிறேன். மேலும் பல கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எம் தார்மீக நோக்கம். வாங்கோ வாங்கோ ஒண்ணாகி!” என்று தெரிவித்துள்ளார்.