நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் நடிக்கும் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாவது குறித்து ரோகிணி பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரொனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக திரையரங்கங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சினிமா படப்பிடிப்புகளும் இல்லாததால், இத்துறையில் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ''இந்த லாக்டவுனால், திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என அரசின் அறிவிப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். இப்போது விமானங்கள் கூட இயங்குகின்றன. அதில் பரவாத கொரோனா வைரஸ், திரையரங்கங்களில் எப்படி பரவும்.?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுமட்டுமின்றி, ஓ.டி.டி ப்ளாட்ஃபார்ம்கள் கண்டிப்பாக தியேட்டர்களுக்கு ஒரு மாற்றாக இருக்க முடியாத எனவும் அவர் திட்டவமட்டமாக கூறினார்.
மேலும் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரான கார்த்தி, ஜோதிகா உள்ளிட்டோரின் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாவது பற்றி பதிலளித்த பன்னீர்செல்வம், ''ஓடிடியில் அவர்கள் படம் வெளியிட முடிவு எடுத்தபோது,எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இப்படிச் செய்யும்போது நாங்கள் அதிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று தான் சொன்னனோம். அப்போது அவர்களுக்கு நாங்கள் திரையரங்குகள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. சிவகுமார் குடும்பத்துப் படங்களை அந்த பிளாட்பாரத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும். இதுதான் எங்கள் நிலை" என்று கூறினார்.
மேலும் அவர், ''திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் என்பவர் வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக சேனல் விஷன் என்கிற யூடியூப் சேனலில் மிகவும் இழிவாக அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் .அதனால் அந்தச் சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.வேலு பிரபாகரனுக்கு எதிராக நாங்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். இப்படிச் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வேலுபிரபாகரனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவருக்குத் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்." என்றார்.