சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தனது படத்தை பார்க்க சொல்லி தேன் பட ஹீரோ தருண்குமார் டிவிட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேன் படக்குழு
கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த அந்த சமயத்தில் தான் ராசி தங்கதுரை கதையில் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் இந்த ஆண்டு மார்ச்சில் திரையரங்கில் வெளியானது. இந்தப் படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சனத் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். தருண், அபர்ணதி, அருள்தாஸ், பாவா லட்சுமணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
தேன்
இந்தப் படம் தேனீ வளர்க்கும் படிக்காத இளம் கிராமத்து இளைஞன் தனது மனைவிக்கு ஏற்படும் அரிய நோயால் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று கதை விரிகிறது. இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றது மேலும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் பல விருதுகளை வென்றது. அசுரன் (2019) படத்துடன் இணைந்து, கோவாவில் நடைபெற்ற இந்தியன் பனோரமா 2020 நிகழ்வில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படமாகும்.
ரஜினிகாந்த் - தருண்குமார்
இந்நிலையில் இந்த படத்தின் நாயகன் தருண்குமார், டிவிட்டரில் ரஜினியை டேக் செய்து, "ரஜினி சார், ப்ளீஸ் எங்க தேன் படத்தை பாருங்க. நாங்கள் தேன் படத்தை உங்களுக்கு திரையிட பல முறை முயற்சித்தோம். தேன் படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.