மும்பை: தண்ணீர் குழாய் திறந்துவிட்ட விவகாரம் தொடர்பாக, நடிகையை கட்டிப்பிடித்த விவகாரம் தொடர்பாக ரியல் எஸ்டேட் முகவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
பிரபல மாடலும் இந்தி நடிகையான ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போது, மருத்துவர்கள் முறையாக கவனிப்பதில்லை, தற்கொலை எண்ணம் தான் வருகிறது எனக் கூறி பரபரப்பை ஏற்பத்தினார். இச்செய்தி அறிந்த பிரபலங்களும் அவருக்கு ஆதரவாக உடல்நிலையை பார்த்துகொள்ள ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், மும்பையில் இவர் வசிக்கும் குடியிருப்பில் ரியல் எஸ்டேட் முகவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இவர், மும்பையின் ஓஷிவாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், ஓஷிவாரா காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "ரியல் எஸ்டேட் முகவர் மணீஷ் குப்தா என்பவர் எனது அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு பகுதியில் வசித்து வருகிறார். இவர், குடியிருப்பின் தண்ணீர் குழாயைத் திறந்து விட்டார். இதனால் எனது வீட்டின் கட்டிடத்தில் கசிவு ஏற்பட்டது; மேலும் எனது வீட்டின் உடமைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன.
அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், சொசைட்டி உறுப்பினர்களிடம் புகார் அளித்தேன். அவர்கள் ரியல் எஸ்டேட் முகவர் மணீஷ் குப்தாவை அழைத்து விசாரித்தனர். தண்ணீரில் நனைந்த பொருட்களால் ஏற்பட்ட இழப்பீடு தொகையை செலுத்த வேண்டும் என்று கூறினர். அதற்கு மணீஷ் குப்தாவும் ஒப்புக் கொண்டார். ஆனால், பேசியபடி பணத்தை தரவில்லை. இழப்பீடு பணத்தை திருப்பி கேட்ட போது, என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
அடுத்த நாள் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னை கட்டிப்பிடித்தார். என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார். தடுக்க முயன்ற போது போது, என்னை தாக்கினார். நான் கூச்சலிட்டதும், அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட ஓஷிவாரா போலீசார், ரியல் எஸ்டேட் முகவர் மணீஷ் குப்தாவிற்கு எதிராக ஐபிசியின் 354, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.