நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் ஆகிய ஓடிடி நிறுவனங்களில் பல படங்கள் ஓடிக்கொண்டிருக்க நீ ஸ்ட்ரீம் (Neestream) என்கிற உள்ளூர் ஓடிடி தளத்திற்கு அடையாளம் தந்தது தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ எனும் மலையாளத் திரைப்படம்.
இந்திய குடும்ப அமைப்பு மீதான விமர்சனப் பார்வையை முன்வைக்கும் இந்த திரைப்படம் தமக்கே உரிய தனி திரைமொழியினால் கவனம் ஈர்த்தது.
இயக்குநர் ஜோ பேபி இயக்கிய இந்த சினிமா 100 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் சமூகவலைதளத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கியது. கேரளாவில் ஒரு அழகான கிராமத்தில் ஆசிரியராக வேலை செய்யும் சூரஜ், நடன ஆசிரியராக இருக்கும் நிமிஷாவை திருமணம் செய்கிறார்.
திருமணத்துக்கு பின்னர் நிமிஷாவுக்கு காலையில் எழுந்து கணவர், மாமனாருக்கு உணவு தயாரிப்பது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, மதிய உணவு தயாரிப்பது, மதிய உணவுக்கு பின் பாத்திரங்களை சுத்தம் செய்வது, பிறகு சமையல் அறையில் இரவு உணவுக்குப்பின் சுத்தம் செய்வது எல்லாம் முடிந்து பின்னிரவில் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை என இயங்குகிறார்.
தினமும் அதேவேளை, அதே விடியல், அதே சலிப்பு, அதே இரவு என வாழும் ஒரு சராசரி புகுந்த வீட்டு மருமகளின் வாழ்க்கையும் அந்த வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படும்போது என்ன முடிவினை அந்த பெண் எடுக்கிறார் என்பதும்தான் மீதி திரைக்கதை. இந்திய சராசரி ஆண்களின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த திரைப்படத்தின் மீது பல்வேறு வகையான கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
அதிலும் சில இந்திய ஆண்கள் உள்ளாடையை துவைக்க ஒரு ஆள் தேவை என்பதற்காக தான் திருமணமே செய்கிறார்கள் என்பது போன்ற ஒரு பார்வையை போகிற போக்கில் சொல்லி இருக்கிற இந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தான் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்துக்கான பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்குகிறார்.
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான்பால் எடிட்டிங் செய்கிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
ALSO READ: சசிகலாவை சந்தித்த.. 'ஜெயலலிதாவின்' வாழ்க்கை வரலாற்று பட 'பெண் இயக்குநர்'!