நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் முட்டையை வைத்து சொல்லி அடி என்ற டாஸ்க் நடைபெற்றது. இதற்கு நடுவராக ஜித்தன் ரமேஷும், போட்டியை நடத்தும் பொறுப்பை திண்டுக்கல் தண்டபாணி என்பவரும் ஏற்று கொண்டனர். முட்டை என்று அவர் சொல்லும்போது யார் அதை எடுக்கிறார்களோ அவர் எதிராளியின் தலையில் முட்டையை அடிக்க வேண்டும். இது கொஞ்சம் ஜாலியாக இருந்தது.
போட்டியாளர்கள் சிலர் முட்டி என்று சொல்லும்போதே முட்டையில் கைவைத்து கலகலப்பூட்டினர். இதைப்பார்த்த ரசிகர்கள் கடந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளர் கவின் தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என சமூக வலைதளங்களில் கவினை புகழ்ந்து தள்ளினர். தன்னுடைய பெயரை சொல்லாமல் திண்டுக்கல் தண்டபாணி என்னும் பெயரில் அவர் நிகழ்ச்சியை நடத்தினார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது.
இந்த நிலையில் நடிகர் கவின் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், '' அது நான் இல்லைப்பா. திண்டுக்கல் தண்டபாணியாக குரல் கொடுத்த நிஜமான கலைஞருக்கு இந்த கிரெடிட்டுகள் போய் சேரட்டும்,'' என சந்திரமுகி மீம் ஒன்றை ஷேர் செய்து விளக்கம் அளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ அது நீங்க இல்லையா? என சோகக்கடலில் மூழ்க ஆரம்பித்து விட்டனர்.