கில்லி, தலைநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் 'செங்கல்பட்டு' மாறன் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலுடன் 'லொள்ளு சபா' மாறனின் புகைப்படம் இணைந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுபற்றி, நடிகர் சந்தானம் படங்களில் அதிகமாக தோன்றும் பிரபல நடிகர் 'லொள்ளு சபா' மாறனிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அட அது நான் இல்லப்பா... அதுவேற மாறன்.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.. இப்போதான் படங்களில் பிஸியாக இருக்கேன்”.. என்று கலகலப்பாக பேசத் தொடங்கினார்.
அத்துடன் திரைத்துறையில் நிகழும் அடுத்தடுத்த மரணங்களைப் பற்றி வருத்தத்தையும் கவலையையும் பதிவு செய்த 'லொள்ளுசபா' மாறன், “இப்படி அடுத்தடுத்து சோக சம்பவங்கள் நிகழ்வதால் ஊடகங்களிடையேயும் மக்களிடமும் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கின்றன. இதன் விளைவுதான் இப்படியான குளறுபடிகள் நடப்பதற்கும் காரணம். அவர்கள் என்ன செய்வார்கள்? சில ஊடகங்களில் என் புகைப்படத்தை போட்டு அந்த செய்தியை வெளியிட்டன. பின்னர் அதே ஊடகங்களில் இருக்கும் நண்பர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு தெளிந்த பின், மீண்டும் அவற்றை சரி செய்து விட்டனர். நேற்றைய தினம் கூட நகைச்சுவை நடிகர் அண்ணன் நெல்லை சிவா மரணமடைந்தார். தினமும் நிகழும் இப்படியான மரண சம்பவங்கள் மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.” என பகிர்ந்துகொண்டார்.
விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பகாலத்தில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் நடிகர் சந்தானம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் சந்தானத்துடன் இணைந்து நடித்த 'லொள்ளு சபா' மாறன், சேசு, மனோகர், சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் தற்போது சந்தானம் நடிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பை தந்து வருகிறார்கள்.
இதுபற்றி பேசிய 'லொள்ளு சபா' மாறன், “சந்தானம் சார் எப்போதும் தன்னுடன் பணியாற்றியவர்களை தன் பயணத்தில் தன்னுடனேயே அழைத்து செல்லும் மனப்பாங்கு உடையவர். சந்தானத்துடன் தொடர்ச்சியாக ஏ1, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தேன். இந்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது, இந்த படங்களின் காமெடிக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. குறிப்பாக அண்மையில் வெளியான பாரிஸ் ஜெயராஜில் மொட்டை ராஜேந்திரன் சாருடன் வரும் அந்த ஆக்ஸிடண்ட் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைத்ததாக பலரும் குறிப்பிட்டனர்.
இப்படி மக்களை சிரிக்க வைப்பதில் இருக்கும் இந்த சந்தோஷமே போதும். தவிர தெரிந்த திரைத்துறை பிரபல நண்பர்களை கொண்டு ‘Go கொரொனா’ எனும் கொரானா விழிப்புணர்வு பாடல் ஒன்றை கடந்த வருடம் உருவாக்கி தற்போது வெளியிட்டிருந்தேன். அது வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அத்துடன் காத்துவாக்குல ரெண்டு காதல், ஜாகுவார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறேன். இந்த படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.
இவை போக, பா.ரஞ்சித் படமொன்றிலும், நகைச்சுவை நடிகர் சதீஷ், சன்னி லியோனுடன் இணைந்து நடிக்கும் ஒரு படத்திலும், பாபிசிம்ஹாவின் இன்னொரு படத்திலும் நடிக்கிறேன். இந்த கொரோனா காலத்தில் அனைவரும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியிருக்கிறது. அவற்றை கடைபிடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே நான் அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்கிறேன்.” என கூறிமுடித்தார்.