பிக்பாஸில் கதை சொல்லும் டாஸ்கில் தாமரை செல்வி தன் கதையை கூறியுள்ளார். அதில், “நான் பிறந்தது தொண்டைமான் அருகே. கிராமம். அப்பா அம்மா கஷ்டப்பட்டு வளர்த்தனர். சாப்பாட்டுக்கே வழியில்லை. அப்பா அம்மாவை அடித்து கொடுமைப்படுத்தி சண்டை போடுவார். கேழ்வரகு, கம்பு தான் பிரதான உணவு. உணவையே பார்த்ததில்லை. நல்ல உணவு சாப்பிட மிகவும் ஆசைப்படுவேன். கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கோம்.
அம்மா நாற்று நட களை எடுக்கச் சென்றார். அதை வைத்து பிள்ளைகளை வளர்ப்பது கஷ்டம். என் மாமா இதையெல்லாம் பார்த்து, அக்கா குடும்பம் கஷ்டத்தில் இருப்பதைப் பார்த்துவிட்டு, என்னை நாடகத்தில் அழைத்துச் சென்று விட்டார். இளம் வயதிலேயே என்னை பெரிய பொண்ணு போல தாவணி பாவாடை அணிவித்து அழைத்துச் சென்றார்கள். எனக்கு நடிக்க தெரியாது என்பதால் பலரும் என்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள். பின்னால் நான் வளர்ந்த பிறகு அவர்கள் என்னுடன் நடிக்க தகுதி இல்லை என புறக்கணிக்கப்பட்டார்கள்.
ஒரு நாடகத்துக்கு 200 ரூபாய் கொடுப்பார்கள். அதை வைத்துதான் வீட்டில் ஏதாவது செய்வோம். அதன்பிறகு ஒருவரைத் திருமணம் செய்தேன். அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்தார் என்பது தெரியவந்தது. பின்னர் எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் சிவராமன். என் கணவரின் கொடுமைக்கு பிறகு என் பையனை அழைத்துக் கொண்டு தனியே வந்து விட்டேன்.
பிறகு பையனை வீட்டில் விட்டுவிட்டு திருப்பூருக்கு சென்று பனியன் கம்பெனியில் வேலை இருந்தேன். இந்தக் கொடுமைகளை அறிந்த பார்த்தசாரதி என்பவர் என் மீது இரக்கப்பட்டு, என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பெற்ற பயனை விட என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டார். பாசமாக இருப்பார். ஆனால் குடும்பத்துக்குத் தேவையான எதையும் செய்யமாட்டார். பத்து ரூபாய் என்றாலும் அதை நான் தான் கொடுக்க வேண்டிய சூழல்.
எனக்கு கிடைத்த மாமியார் மிகப்பெரிய பாக்கியம். தங்கமானவர். அழ விட மாட்டார். நான் சாப்பிடாமல் இருப்பதை அனுமதிக்க மாட்டார். நாடகத்துக்கு ஊர் ஊராகச் சென்று பைகளை எடுத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி போவது கஷ்டம். ஒரு 200 ரூபாய் சம்பாதிக்க ஆண்களிடம் திட்டு வாங்க வேண்டும். ஆண்கள் டபுள் மீனிங்கில் பேசுவார்கள். வேறு வழியில்லாமல் அவர்களுடன் இணைந்து அதை எல்லாம் பேசி சமாளித்து வருவேன். ஆனாலும் என் மாமியார் புரிந்து கொள்வார்.
பின்னர் 5,6 பவுன் சேர்த்தேன். அந்த நகையை விற்றுவிட்டு ரசிகர்கள் உதவியுடன் ஒரு வீடு வாங்கினேன். லாக்டவுன் ஆகிவிட்டது. நாடகம் கிடைக்கவில்லை. பணம் வரவில்லை. வாங்கிய பணத்தை திருப்பி தர முடியவில்லை, நகைகளை திருப்ப முடியவில்லை. சாப்பாடு, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது எல்லாமே கஷ்டமாகிவிட்டது. இதனிடையே என் மகனை பார்க்க வேண்டும் என்று அழைத்துச் சென்றார்கள். திரும்பவும் நான் அவனைப் பார்க்கவே இல்லை. என் பிள்ளையை பார்த்து மாதக் கணக்கானது. என் கண்ணில் காட்டவே மாட்டீங்குறார்கள் (அழத் தொடங்கிவிட்டார்).
மீண்டும் மகனைத் தேடி சென்றபோது, மகன் என்னை பார்த்து விட்டு, “நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்” என்று சொல்லி விட்டான். அவர்கள் என்ன சொல்லி வைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் தவறு செய்துவிட்டேன் என்று என் பையன் நினைத்துவிட்டான். என்னிடம் பேச மாட்டிங்குறான். நான் பட்ட கஷ்டம் தெரியாமல் அவனை வளர்க்கிறார்கள். இரண்டாவது மகன் மிகவும் பாசமாக இருப்பான். மாமியார் பார்த்துக் கொள்கிறார்.
இந்த சூழலில் இந்த நிகழ்ச்சியில் இருந்து போன் வந்தது. எனக்கு இது பற்றி ஒன்றுமே தெரியாது. நான் வந்தால் நாடக உலகத்திற்கே பெருமையாக இருக்கும் அனைவரும் என்னை அறிந்து கொள்வார்கள் என்று நண்பர்கள் கூறினர். பிக்பாஸ் வந்தால் கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று சொன்னார்கள்.
சிறுவயதில் என்னால் விளையாட கூட முடியாது. ஆசைப்பட்டதை சாப்பிட முடியாது. இங்கு வந்துதான் நன்றாக சாப்பிட்டேன். சந்தோஷமாக இருந்தேன். என்ன பேசுவது என்று எனக்கு தெரியாது. ஆனால் பட்டு பட்டுவென்று பேசிவிடுவேன். சொன்னால்தான் நான் தவறாக பேசுகிறேன் என்பதே எனக்கு தெரியும். என் பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக தான் என் வாழ்க்கையே. இந்த நாடகக் கலையை அழிய விடக்கூடாது என்பதுதான் என் ஆசை. கனவு .எல்லாமே. நன்றி” என்று கூறி முடித்துள்ளார்.