பிக்பாஸ் வீட்டில் தாமரை மற்றும் பிரியங்கா பஞ்சாயத்தை இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன் தீர்த்துவைத்துள்ளார்.
அதன்படி, “தாமரை கேப்டன் ஆவதற்கு தகுதி இல்லை” என பிரியங்கா கூறியது குறித்து ரம்யா கிருஷ்ணன் பிரியங்காவிடம், அனைவர் முன்னிலையிலும் வார இறுதியில் கேட்டபோது பதில் அளித்த பிரியங்கா, “அப்படி இல்ல மேடம். ஒரு வித தனிப்பட்ட விரோதங்கள் இருக்கும்பொழுது கேப்டன் ஆகி ஒவ்வொருவரிடம் அதை சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அவற்றையெல்லாம் முன்பே சரிசெய்துகொண்டு கேப்டன் ஆகலாம் என்றுதான் நான் கூறினேன். மற்றபடி யாருக்கு வேண்டுமானாலும் கேப்டன் ஆகும் தகுதி உள்ளது. தாமரை ஒத்த ஆளாக எல்லா வேலையையும் செய்துவிடுவார். ஆனால் கேப்டன்ஷிப் என்பது அனைவரையும் வேலை வாங்க வேண்டும். தாமரைக்கு ஒருவருடன் தனிப்பட்ட விரோதம் இருக்கும்போது அவர் கேப்டனான பின் சிலரை வேலை வாங்குவது கடினம். அதனால் கேப்டன் ஆவதற்கு முன்பே அவற்றை சரி செய்ய வேண்டும் என்று கூறினேன்.
ஏனென்றால் அவற்றை சரிசெய்துகொள்வதற்கான வாய்ப்பு எத்தனையோ வடிவங்களில் இருக்கிறது. அதற்கு கேப்டன் ஆகவேண்டு என்கிற அவசியம் இல்லை அல்லது கேப்டனாக இருக்கும் போது அதை செய்துகொண்டிருக்க வேண்டியதில்லை. ஆளுமையை அனைவரிடத்திலும் செலுத்தி வேலை வாங்க வேண்டும்.!” என்று கூறினார்.
இதற்கு முன் தாமரை தரப்பு பிரதிவாதத்தையும் ரம்யா கிருஷ்ணன் கேட்டிருந்தார். அப்போது பேசியதுடன், பிரியங்கா தமது வாதத்தை முன்வைத்துக் கொண்டிருந்தபோதே இடைமறித்து தன் கருத்தை சொன்ன தாமரை, “அப்படியெல்லாம் ஒருவரை தகுதி இல்லை என சொல்லிவிட முடியாது மேடம். கேப்டன் ஆனால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து அவங்க மட்டும் சொல்லிட்டு செஞ்சாங்களா? யார் வேணாலும் கேப்டன் ஆகலாம், பொறுப்பை கொடுத்து அதன் பின் சரியாக செயல் நடக்கலன்னா விமர்சிக்கலாம். ஆனால் அதற்கு முன்பே - அதாவது கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாமலேயே விமர்சிப்பது ஏற்க முடியாதது.
இல்ல ஊர்லலாம் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுற ஒருத்தர் எல்லாருக்கும் பிடிச்சவரா தான் இருக்கிறாரா? எல்லாத்துக்கும் தகுதியானவராதான் இருக்கிறாரா? இல்ல நாம விரும்புறவங்க தான் தலைவர் ஆகுறாங்களா?... அப்படி எனக்கு ஒருவருடன் சிக்கல் இருந்தால், நான் ஒவ்வொரு விஷயத்துக்கும் தனிப்பட்ட அணிகளை அமைக்கிறேன் இல்லையா? அந்த அணிக்கு ஒரு உப தலைவரை நியமிக்கிறேன் இல்லையா? அவர்களிடம் சொல்லி அந்த குறிப்பிட்ட நபரை வேலை வாங்குவேன். நான் சொன்னால் கேட்காதவர்கள், அந்த குறிப்பிட்ட அணியின் தலைவர் சொன்னாலும் கேட்காமல் போய்விடுவார்களா என்ன?” என ஆவேசமாய் பொங்கினார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும், பிக்பாஸ் அரங்கில் இருந்தவர்களும் கைத்தட்டினர்.
பின்னர் ரம்யா கிருஷ்ணன் பிரியங்காவுக்கு அட்வைஸ் செய்தார். பிரியங்காவும் தான் சொன்னதன் அர்த்தம் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை விளக்கியதுடன், தாமரை நனறாக பேசியதாக குறிப்பிட்டார். அதன் பின்னர் தாமரையை சந்தித்த நடிகர் சஞ்சீவ், “என்னா போடு போட்டீங்க. குறிப்பா, அந்த ‘அணி தலைவர்கள்கிட்ட சொல்லி கட்டளையிடுவேன்’ என்று சொன்ன அந்த பாய்ண்ட்ல நான் ஆடிப்போய்ட்டேன். இன்னும் அதில் இருந்து மீளவில்லை. நான் உங்கள என்னவோ நெனைச்சேன்..” என மிரண்டு போய் பாராட்டிவிட்டு சென்றார்.