விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இத்திரைப்படம் வரும் 2021-ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் திருநாளை ஒட்டி, நேரடியாக தியேட்டர்களில் மாஸ்டர் 10-ஆம் தேதி அன்று வெளியாகும் என விவரம் அறிந்த கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி., ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷமாக, மாஸ்டர் படக்குழு படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். மரண மாஸாக இருக்கும் டீசர் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று தளபதி ரசிகர்களுக்கு சிறப்பான நாள். இன்றுடன் விஜய் சினிமா துறைக்குள் வந்து 28 ஆண்டுகள் நிறைவடைகிறது. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வெளியான 'நாளைய தீர்ப்பு' தான் அவரது முதல் படம். அதன் பிறகு பல பிளாக்பஸ்டர் மற்றும் ஹிட் படங்களை கொடுத்து இன்று தனக்கென்று ரசிகர்கள் மனதில் ஒரு கோட்டையே கட்டியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தளபதி விஜய் பற்றிய போஸ்டர்களுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் விசித்திரமாக விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி மயிலாடுதுறையில் மொட்டை அடித்து ரசிகர்கள் வழிபாடு செய்துள்ளனர். மேலும் மதுரையில் ஆங்காங்கே 2026-இன் தமிழகமே என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.