நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தினை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தினை இயக்கியுள்ள நெல்சன் இயக்கியுள்ளார்.

பீஸ்ட் படத்தின் டிரைலர், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திரைப்படம் வெளியாகும் நாளையும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
முன்னதாக பீஸ்ட் படத்தில் இருந்து, அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்களும், படத்தின் புதிய போஸ்டர்களும் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி
இவை அனைத்தையும் விட, பீஸ்ட் டிரைலர் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்பு தான், படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பீஸ்ட்டை தொடர்ந்து, விஜய் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சி பைடிப்பள்ளியின் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
ஒட்டுமொத்தமா புது கூட்டணி
மேலும், இந்த படத்தினை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். தொடர்ந்து, இத்திரைப்படம் குறித்து மற்றபடி தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில், நேற்று (05.04.2022) இந்த படத்தின் நடிகை மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தெலுங்கில் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா, விஜய்யின் ஜோடியாக முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். விஜய் திரைப் படத்திற்கு தமன் இசையமைப்பது இது தான் முதல் முறை.
படத்தின் பூஜை
'தளபதி 66' என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் பூஜை, இன்று சென்னையில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி, நடிகை ராஷ்மிகா சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது
தொடர்ந்து தற்போது 'தளபதி 66' பூஜையின் சமயத்தில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா, படத்தின் இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் உள்ள புகைப்படமும் தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
ஆர்வத்தில் ரசிகர்கள்
'தளபதி 66' குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படம் என கூறப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக புதிய கூட்டணியுடன் விஜய் இறங்கி உள்ளதால், படம் எந்த அளவுக்கு வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். மேலும், இந்த திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.