கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தலைவி'. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
“ஒரு சினிமா காரிய வைச்சு எங்களுக்கு அரசியல் சொல்லி கொடுக்கிறதுங்கிறது” என ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லரில் “இது ஆம்பளைங்க உலகம் .. இத ஆம்பளங்கதான் ஆளனும்” என.. பின்னணியில் ஆண்களின் அதிகார வசனங்கள் ஒலிக்கிறது. ஜெயலலிதாவாக தோன்றுகிறார் கங்கணா. நடிப்பு வாழ்க்கை, எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் தோன்றும் அரவிந்த் சுவாமியுடன் உறவு என போகும் வாழ்க்கையில் ஜெயலலிதாவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்களையும் அநீதிகளையும் பெண் என்பதாலேயே இழைக்கப்படும் ஆதிக்கங்களையும் எப்படி அவர் எதிர்கொள்கிறார் என ஜி.வி.பிரகாஷின் வேற லெவல் பின்னணி இசையில் காண்பிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்த டிரெய்லரில், “மகா பாரதத்தில் பாஞ்சாலிக்கு இதேதான் நடந்தது.. அவ புடவையை இழுத்து அவமானப்படுத்தின கவுரவர்களின் கதையை முடித்து கூந்தலை முடிந்து, சபதத்தை முடிச்சா.. அந்த மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் இருக்கிறது.. ஜெயா!” என்று கங்கணா ரனாவத் பேசும், வசனத்தின் போது "ஜெயா" என்கிற சொல் மட்டும் பல முனைகளிலிருந்தும் எதிரொலிக்கிறது. கண்டிப்பாக அது ஒரு கூஸ்பம்ப் சீன் தான் என்பது தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஜிவி பிரகாஷ் பிஜிஎம் தடதடவென ஒலித்து அதன் தீவிரத்தை நம்மிடையே கடத்தி பட்டையை கிளப்புகிறது.
இதேபோல், “நேத்து பேஞ்ச மழையில் முளைச்ச காளான் நீ, ஆலமரத்தை அசைக்க பார்க்காத” என சமுத்திரகனி பேச, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “யாரு காளான், யாரு ஆலமரம்னு காலம் பதில் சொல்லும்” என கங்கனா ரனாவத் பேசும் இடம் சரவெடி. படம் முழுவதும் எம்ஜிஆரின் பாடி லாங்வேஜையும் தொப்பியையும் கொண்டிருக்கும் அரவிந்த் சுவாமி, “நீ மக்களை விரும்பினால் மக்கள் உன்னை விரும்புவார்கள்.. அதான் அரசியல்” என கூறுவதும் அப்படித்தான்.
நாடாளுமன்றத்தில் வரும் காட்சி ஒன்றில், “இப்படி சிறப்பாக ஆங்கிலம் பேசும் ஒரு தென்னிந்தியரை நான் பார்த்ததே இல்லை.." என்று மறைமுகமாக தென்னிந்தியர்களை கிண்டல் செய்வது போல பேசும் அரசியல்வாதி ஒருவருக்கு “இப்படி ஒரு சிறந்த ஆங்கிலத்தை வட இந்தியர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் கூட நினைத்துப் பார்க்க வில்லை” என்று ஜெயலலிதாவாக கங்கணா கொடுக்கும் பதிலடியும் ‘வேற லெவல்!’
டிரெய்லரின் இறுதிப்பகுதியாக புல்லட் ப்ரூஃப் புடவை போல் முழுவதும் போர்த்தப்பட்ட புடவை அணிந்தபடி, “என்னை அம்மாவா பாத்தீங்கனா எனது இதயத்தில் உங்களுக்கு இடம் இருக்கும்.. என்னை வெறும் பொம்பளையா பார்த்தீர்களென்றால்....” என கடைசி வசனம் ஒலித்து பாதியில் நிற்கிறது. அதன் பிறகு என்ன? ஜிவி பிரகாஷின் பிஜிஎம் மீண்டும் செவிப்பறையை கிழித்து தொங்க விடும் டிரெய்லர் முடியும்.
ஆண்கள் மட்டுமே பெரிதாக சாதிக்க முடியும் என கருதப்படும் அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக அரசியலில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரும் ஜெயலலிதாவின் இந்த பயோபிக் பெண்கள் மட்டுமல்லாது அனைத்து சாரரையும் கவருமா? என்பதை ஏப்ரல் 23 ஆம் தேதி பார்க்கலாம். படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ALSO READ: தலைவி பட விழாவில் பேசும்போது கண்கலங்கி அழுதே விட்ட கங்கணா.. உருக்கமான காரணம்.. வீடியோ!