தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்குமார் மாநில அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டியில் கலந்துக் கொண்டதற்கான சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார், பைக், ஆளில்லா விமானம் இயக்கும் ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி என பலவற்றிலும் ஆர்வம் கொண்ட அஜித்திற்கு துப்பாக்கிச்சுடுவதிலும் அதீத ஆர்வம். அவ்வப்போது அஜித் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
துப்பாக்கிச்சுடும் உரிமம் வைத்துள்ள அஜித், கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித் குமார் கலந்துக் கொண்டார். இதையடுத்து, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற அஜித், வரும் டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போட்டியில் கலந்து கொண்ட அஜித்துக்கு சென்னை ரைபிள் கிளப் சான்றிதழ் அளித்து கெளரவித்துள்ளது. அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை அஜித்தின் தீவிர ரசிகர்களும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, மீண்டும் போனி கபூர், ஹெ.வினோத் கூட்டணியில் ‘தல 60’ ஆக்ஷன் திரைப்படத்திற்காக அஜித் தற்போது தயாராகி வருகிறார்.