ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ள படம் ஜெய் பீம்.
படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தமிழகத்தில் 1990களில் பழங்குடி இருளர் இன இளைஞர்களை சந்தேக திருட்டு கேஸில் பிடித்துக்கொண்டு மனித உரிமை மீறலை நிகழ்த்தும் போலீஸாரின் கோர பக்கத்தை தோலுரிக்கிறது படம். வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா, இப்படத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர போராடுகிறார்.
இப்படத்தில் இருளர் இன தம்பதியாக வரும் மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளனர்.
இவர்களின் மகள் அல்லி எனும் கேரக்டரில் நடித்த சிறுமி இறுதிக்காட்சியில் சூர்யா போலவே கால் மேல் கால் போட்டு நியூஸ் பேப்பர் படிக்க நினைப்பார். ஆனால் சூர்யாவை பார்த்து பயம் கொள்வார். ஆனால் சூர்யாவோ, அச்சிறுமியை பார்த்து ‘ம்ம்’ என்று கால் மேல் கால் போட்டுக்கொள்வதற்கு சிறுமிக்கு இருக்கும் தயக்கத்தை உடைப்பார்.
இந்நிலையில் இந்த சிறுமி ஜெய் பீம் படத்தில் நடித்ததற்காக அவருக்கு பள்ளியில் டிசி கொடுப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், சிறுமியின் பெற்றொருக்கு பிஹைண்ட்வுட்ஸில் இருந்து தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டறிந்தோம். அப்போது சிறுமியின் பெற்றோர் தரப்பில் இருந்து, “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அது வதந்திதான். பாப்பாவுக்கு பள்ளியில் நன்றாக சப்போர்ட் பண்ணுகிறார்கள்.
எனினும் படத்தில் பாப்பா நடித்தது குறித்து அவர்கள் தரப்பில் இருந்து கேட்டறியவில்லை. அதையும் கேட்டறிந்து கொண்டு தகவல் சொல்கிறோம். ஆனால் படத்தில் நடித்ததற்காக பள்ளி தரப்பில் இருந்து எந்த சிக்கலும் உண்டாகவில்லை. அவ்வாறு பரவும் செய்தி வதந்தி. அதையும் பாப்பாவிடம் வந்து இந்த வதந்திகளை செய்கிறார்கள். இவர்களை என்ன சொல்வது..” என குறிப்பிட்டுள்ளனர்.