தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய இழப்பாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த விவேக் சினிமா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சினிமாவில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். அவரது இழப்பு காரணமாக நடிகர், நடிகைகளும், பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவிக்க அவரது வீட்டை அடைந்துள்ளனர்.
தனது காமெடிகளால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த பெருமை அவருக்கு சேரும். எனவே தான் அவர் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். மேலும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருது, எடிசன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் புகழ்பெற்ற நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு உரிய மரியாதையுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்ய இருக்கின்றனர். இது குறித்து வெளியாகியுள்ள வெளியாகியுள்ள அறிக்கையில் "தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் “சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படுபவரும், தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு, விருதுகளைப் பெற்றவரும், தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு. விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றும் சமூகச் சேவையினை கொளரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.