கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்க, அதன் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வணிகம் சார்ந்த செயல்பாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக மக்களை மகிழ்வித்து வரும் திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நடைபெறாததால், அதனை நம்பி பிழைப்பு நடத்தி வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நாளை (31/05/2020) முதல் துவங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து படப்பிடிப்பின் போது, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட அதிகபட்சம் 60 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ''60 பேர்கொண்ட குழு சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கும் நன்றி. 80 முதல் 100 எண்ணிக்கையிலான குழுவை அனுமதித்தால் சிறுபடங்களும் படப்பிடிப்பை நடத்தி சினிமாவும் படிப்படியாக மீளத்தொடங்கும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.