தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.
இதனைத் தொடர்ந்து ஓராண்டு காலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், சிறப்பு அதிகாரி நியமனத்தை ரத்து செய்து, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று விஷால் சார்பிலும் சங்க உறுப்பினரான ராதாகிருஷ்ணன் என்பவரின் தரப்பிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு அதிகாரியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை கருத்தில் கொண்டு, ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அவசர வழக்கொன்றைத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடித்து, அது குறித்த அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.