கவிப்பேரரசு வைரமுத்து தமிழில் பல்லாயிரம் ஹிட் பாடல்களை தந்தவர்.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா என பல முன்னணி இசையமைப்பாளர்களுக்கும், பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா, கே.எஸ்.ரவிகுமார் , மணிரத்னம் என முன்னணி இயக்குநர்கள் பலருடைய திரைப்படங்களுக்கும், ரஜினி , கமல் தொடங்கி இக்கால தலைமுறை வரை பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி வருபவர்.
கவிப்பேரரசு என்கிற அடைமொழியுடன், கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பல பன்முகமாக இயங்கிய வைரமுத்து அண்மையில் தமது நாட்படு தேறல் எனும் தமிழ் தனியிசைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். மேலும் பல படங்களுக்கு பாடல் எழுதியும் வருகிறார்.
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தம்முடைய ட்விட்டரில், “கமல் இருக்கும் வரை ரஜினிக்கும் ரஜினி இருக்கும் வரை கமலுக்கும், விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும் அஜித் இருக்கும் வரை விஜய்க்கும் ஒரு பிடிமானம் இருக்கும். எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே .. காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக டி.எம்.செளந்தரராஜன் குறித்து அண்மையில் நினைவலை கவிதை எழுதியிருந்த வைரமுத்து, “வீட்டுக்குள் ஒலித்த வெண்கல வீணை, ஒரு நூற்றாண்டுத் தமிழர்கள் காதுகளில் அணிந்த வைரக்கடுக்கன், தமிழ்நாட்டின் ‘அந்தநாள் ஞாபகம்’, எங்கள் காதல் கண்ணீர் வீரம் ஞானம் அனைத்தையும் வாரிக் குவித்துப் பாடிப் பரவிய பரவசம், உம்மை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்” என உருக்கமாக எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.