பிரபல முன்னணி திரைப்பட இயக்குநர்கள், இசையமைப்பாளர், ஹீரோக்களின் திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன்.
எகிறி குதித்தேன், கத்தாழ கண்ணால, ஆலங்குயில் கூவும் ரயில், உன் சமையலறையில், நான் மெர்சலாயிட்டேன், என்னோடு நீயிருந்தால், ஆகாயம் தீப்பிடிச்சா, ஆள்தோட்ட பூபதி, காதல் ஆசை யாரை விட்டதோ ஆகிய 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
இவருடைய மகள் தூரிகை. இவர் எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர். ஆங்கில இதழ் ஒன்றை அண்மையில் தொடங்கியிருந்தார். இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏவில் உள்ள கபிலனின் வீட்டில், இரவு 8 மணி அளவில் விபரீத முடிவெடுத்து சோக நிலையில் இருந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை சாலி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூரிகையின் உடல் கொண்டு செல்லப்பட்டது, ஆனால் தூரிகை உயிரிழந்துவிட்டது உறுதியான நிலையில், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என கூறப்படுகிறது.
பாடலாசிரியர் கபிலனுக்கு மறைந்த அவரது மகள் தூரிகையை தவிர, 9 வயது மதிக்கத்தக்க ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வது எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.