நாட்டில் ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றால் இன்னொருபுறம் திரைக் கலைஞர்களின் அடுத்தடுத்த மரண சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சி அலைகளையும் உண்டுபண்ணி இருக்கின்றன.
அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் மரணமடைந்த சம்பவங்கள் இன்றளவும் பலரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி இருக்கின்றன. இந்திய அளவில் மரணமடைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து சின்னத்திரை நடிகை சித்ரா, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கோமகன், டி.கே.எஸ்.நடராஜன் உள்ளிட்டோர் மரணமடைந்துள்ளனர். இதேபோல் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, கே. வி.ஆனந்த், உள்ளிட்டோர் மரணம் அடைந்திருக்கின்றனர்.
நகைச்சுவை நடிகர்கள் சின்னக்கலைவாணர் விவேக், விவேக்கைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் பாண்டு, அண்மையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் நடித்த பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா உள்ளிட்டோர் மரணமடைந்த சம்பவங்கள் நேற்றும் இன்றும் என நிகழ்ந்தவை தான்.இவற்றின் சுவடுகள் மறைவதற்குள் உடனடியாக அடுத்த மரண சம்பவம் இன்று மே 12-ஆம் தேதி நிகழ்ந்தது இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஆம் கில்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த செங்கல்பட்டு மாறன் மருத்துவமனையில் கொரோனா தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார்.
இதுபற்றி நடிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கல் பதிவை தெரிவித்து வரும் நிலையில், இது பற்றி குறிப்பிட்ட நடிகை கஸ்தூரி, “போன மாதம் விவேக் அவர்கள் . போன வாரம் நடிகர் பாண்டு. நேற்று முன்நாள் ஜோக்கர் துளசி. நேற்று நெல்லை சிவா , இன்று இப்பொழுது காமெடி நடிகர் மாறன். தமிழ் சினிமா சிரிப்பை தொலைத்து கொண்டிருக்கிறது” என்று தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.