கேஜிஎஃப் இரண்டு பாகங்களின் வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகியுள்ளன.
இண்டஸ்ட்ரி ஹிட் கேஜிஎஃப் 2….
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎஃப் 2 தமிழில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். இந்த 10,000 திரையரங்குகளில் தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது. ஆனால் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளியானது முதல் உலகம் எங்கும் அமோகமான வரவேற்பை கேஜிஎஃப் 2 பெற்றுவருகிறது.
இந்த படத்தில் யாஷுடன், ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். மேலும் 19 வயது உஜ்வல் குல்கர்னி இந்த படத்தை எடிட் செய்துள்ளார்.
நான்கு நாட்களில் 500 கோடி மைல்கல்…
கேஜிஎஃப் 2 வெளியானது முதல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் 240 கோடி ரூபாயை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிலும் சிறப்பான வசூலை செய்து வருகிறது. பல புறநகர்ப் பகுதிகளில் படத்துக்குக் கூட்டம் அதிகமாக வருவதாக கூடுதலாக நாற்காலிகள் போட்டு காட்சிகள் திரையிடப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே நள்ளிரவு காட்சிகள் மற்றும் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட்டு வருகின்றன. மொத்தம் நான்கு நாட்களில் உலகளவில் 540 கோடி ரூபாயை இந்த படம் மொத்தமாக வசூல் செய்துள்ளது. இந்த வசூல் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் சாதனையாகப் பாரக்கப்படுகிறது.
சிலிர்க்கவைத்த வசனங்கள்….
இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக படத்தின் வசனங்களும் அமைந்தன. அதிலும் தமிழ் வெர்ஷனில் வசனங்கள் கூடுதல் கவனத்தைப் பெற்றன. ராக்கி பேசும் ஒவ்வொரு பன்ச் வசனங்களும் சமூகவலைதளங்களில் டிரண்ட்டாகி வருகின்றன. தமிழில் இரு பாகங்களுக்கும் வசனம் எழுதியவர் கே ஜி அசோக் என்பவர்தான். இவர் கமல்ஹாசனிடம் விருமாண்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ’ஆயுள் ரேகை’ என்ற படம் வெளியானது. சமீபத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதியிடம் சண்டை போட்டு எமோஷனல் ஆகும் ’நட்ராஜ் அண்ணன்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இப்போது மொழிமாற்று படங்களுக்காக டப்பிங் பணிகளை செய்து வரும் இவர், கேஜிஎஃப் 2 படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.