தமிழ் சினிமாவில் தற்போது பல ரீமேக் படங்கள் தயாராகி வருவது குறித்து ஒரு பார்வை.
சினிமாவை பொறுத்தவரை ரீமேக் படங்கள் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம்தான். எத்தனையோ அமிதாப் பச்சன் நடித்த ஹிந்தி திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அதே போல நடிகர் விஜய்யும் தெலுங்கு படங்களை ரீமேக் செய்து நடித்து வந்தார். கில்லி, போக்கிரி போன்ற அவரது திரைப்படங்கள் யாவும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை. இதனிடையே தற்போது தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் ரீமேக் படங்களில் நடித்து வருகின்றனர்.
2018-ல் ஹிந்தியில் அயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் அந்தாதூன். இத்திரைப்படத்தின் உரிமையை நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார். இதையடுத்து பிரஷாந்த் நடிப்பில் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு. இத்திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிஷங்கர் நடிக்கிறார். இத்திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். மேலும் மலையாளத்தில் ஷேன் நிகம் நடித்து சூப்பர் ஹிட் அடித்த இஷ்க் படத்தை தமிழில் கதிர் நடிப்பில் ரீமேக் செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதே போல மலையாளத்தில் அன்னா பென் நடித்த திரைப்படம் ஹெலன். இத்திரைப்படத்தை தமிழில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை வைத்து ரீமேக் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மோரா, ஜுங்கா படங்களை இயக்கிய கோகுல் இத்திரைப்படத்தை இயக்குகிறார். மேலும் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த சார்லி, தமிழில் மாதவன் நடிப்பில் தயாராகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கன்னடத்தில் ஹிட் அடித்த மஃப்டி திரைப்படம் தமிழில் கௌதம் கார்த்திக் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகி வருகிறது. அதே போல பெல் பாட்டம் என்கிற கன்னடப்படம் தமிழில் சத்யா சிவா இயக்கத்தில் கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வருகிறது.