தமிழ் சினிமாவை பொருத்தவரை தேசப்பக்தி திரைப்படங்களுக்கு பஞ்சமே இல்லை. எண்ணிலடங்காத திரைப்படங்கள் உண்டு.
அவற்றில் மிக முக்கியமான எல்லா தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட மிகச்சிறந்த 10 திரைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குருதிப்புனல் (1995)
ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் ISC இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டது. தெலுங்கு மொழியில் துரோகி எனும் பெயரில் வெளியானது. பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
துப்பாக்கி (2012)
ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜம்வால் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன திரைப்படம். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்த படத்தின் திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைக்கதைகளுள் ஒன்றாக அவதானிக்கப்படுகிறது.
உன்னைப்போல் ஒருவன் (2009)
இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில், ஸ்ருதி ஹாசன் இசையில், கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஒரு திரைப்படம். இந்த படம் நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008 இல் வெளியான எ வென்னஸ்டே (A wednesday) என்ற இந்தித் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும்.
ஜெய்ஹிந்த் (1994)
நடிகர் அர்ஜூன் இயக்கி நடித்த திரைப்படமாகும். வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. கவுண்டமணி - செந்தில் காமெடி இந்த படத்தின் மிக முக்கிய அம்சமாகும். அர்ஜூனுடன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, கவுண்டமணி, செந்தில், மனோரமா ஆகியோர் நடித்து இருந்தனர்.
ரோஜா (1992)
மணிரத்னம் இயக்கத்தில், கே. பாலசந்தர் தயாரிப்பில், அரவிந்த்சாமி, மதுபாலா மற்றும் ஜனகராஜ் நடித்தனர். 5 தமிழக அரசு விருது, 3 தேசிய விருது என பெரிய கௌரவத்தை ரோஜா திரைப்படம் பெற்றது. ஆங்கில டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது ரோஜா திரைப்படம். ரோஜா திரைப்படத்தின் மூலம் தான் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பம்பாய் (1995)
மணிரத்னம் இயக்கத்தில், ராஜிவ் மேனன் ஒளிப்பதிவில், ஏ. ஆர் ரகுமான் இசையில், அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர், கிட்டி நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இரண்டு தேசிய விருதுகளை இந்த திரைப்படம் வென்றது. இத்திரைப்படம் வெளியிடப்பட்டபொழுது சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் பம்பாயில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களினால் புனையப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
ரமணா (2002)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில், பிரபு ஒளிப்பதிவில், இளையராஜா இசையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சிம்ரன், யூகி சேது நடித்தனர். இரண்டு தமிழக அரசு விருதை வென்றது. இந்தி, தெலுங்கு, வங்காளத்தில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.
முதல்வன் (1999)
ஷங்கர் இயக்கத்தில், கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவில், ஏ. ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்ஜூன், ரகுவரன், மணிவண்ணன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் நடித்தனர். இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் என ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படம் 3 மாநில விருதுகளை வென்றது.
இந்தியன் (1996)
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. 1977 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த நாம் பிறந்த மண் படத்தின் அடிப்படை கதையை ஒட்டி இப்படம் அமைந்திருந்தது. 1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் வெளியான ஒரு சில தினங்களில் 6,00,000 கேசட் பதிவுகள் விற்பனையாகி சாதனை படைத்தது.
ஹே ராம் (2000)
இது தமிழ் படமல்ல... இந்தியப்படம் என சொல்லியே கமல் இந்த படத்தை வெளியிட்டார். இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி, அதுல் குல்கர்னி, ஹேம மாலினி, கிரீஷ் கர்னாட், நசிருதீன் ஷா, வசுந்தரா தாஸ் நடித்திருந்தனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இசைஞானி இளையாராஜ இசையமைத்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று தேசிய விருதுகளை வென்றது ஹேராம்.