தமிழில் ‘தேவி 2’, ‘கண்ணே கலைமானே’ திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை தமன்னா பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நவாசுதீன் சித்திக் ஹீரோவாக நடிக்கும் பாலிவுட் திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் தமன்னா, பிரபுதேவா நடிப்பில் ஹிந்தியில் வெளியான ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ரீமேக் ‘காமோஷி’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து நவாசுதீன் சித்திக் நடிக்கும் படத்தின் ஹீரோயினாக நடிகை தமன்னா நடிக்கவிருக்கிறார்.
நவாசுதீனின் தம்பி ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கும் இப்படத்திற்கு ‘போலே சுடியான்’ என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.