நடிகர் டி.ராஜேந்தர் உருவாக்கியுள்ள தனியிசை பாடலில் தமது பேரனை பாடகராகவும் நடிகராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், டி.ஆர் ரெக்கார்ட்ஸ் எனும் தமது இசை நிறுவனத்தின் சார்பில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் எழுதி, இசையமைத்து 'வந்தே வந்தே மாதரம்' என்னும் இசை ஆல்பத்தை தயாரித்து குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியீட்டுள்ளார்.
இவ்விழாவில் பேசிய டி.ராஜேந்தர், “என் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது. உணர்வுள்ள மனிதன்தான் உணர்ச்சிவசப்பட முடியும். இயக்குநர், இசையமைப்பாளர் என என் பல படங்களுக்கு ப்ளாட்டினம் டிஸ்க் வாங்கி பெற்றிருக்கிறேன். நான் ட்யூன் பேங்கே வைத்துள்ளேன். இன்னும் பல பாடல்களை டி.ஆர். ரெக்கார்ட்ஸ் வெளியிட ஆரம்பித்துள்ளேன். பலருக்கும் இதன் மூலம் வாய்ப்புகள் உண்டாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசியவர், “முதல் பாடலாக இந்த 'வந்தே வந்தே மாதரம்' எனும் ஆல்பம் பாடலை என் தாய்மொழி தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியிட்டிருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 'மோனிஷா என் மோனலிசா' எனும் படத்தை இந்தியில் எடுத்து பான் இந்தியா படமாக அதை அப்போதே முயற்சித்தேன். அப்போது டிஜிட்டல் வசதிஇல்லை. ஆனால் எனக்கெல்லாம் முன்னோடியாக மணிரத்னம் இருக்கிறார். இன்று ராஜமௌலி இருக்கிறார். ஆர்.ஆர்.ஆர் படம்,. காந்தாரா படம், கேஜிஎஃப் படங்கள் முன்னோடியாக இன்று இருக்கின்றன.
இப்போதும் என் பேரன் ஜேசனை வைத்து பான் இந்திய அளவில் அறிமுகப்படுத்த முயற்சித்தேன். ஆனால், நடுவில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, இறைவன் அருளால் மீண்டு வந்தேன். ஆக, அடுத்து அந்த படத்தைத் தொடங்க போகிறேன்.” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.