கொரோனா அச்சுறுத்தலால் உலகமே முடங்கிக் கிடக்க பலருக்கு கை கொடுக்கும் தெய்வமாக பொழுதுபோக்கின் உச்சமாக விளங்குவது OTT Platform-கள்தான். எந்த மொழியாக இருந்தாலும், நல்ல படங்களைத் தேடிப் பிடித்துப் பார்க்கும் ஆர்வம் பலருக்கு வந்துவிட்டது. அவ்வகையில் அண்மையில் அனைவரின் மனதையும் அள்ளிச் சென்ற படம் அல்லு அர்ஜுன் நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ.
நாம் பள்ளி நாட்களில் படித்திருக்கும் ஒரு கதையான தி ப்ரின்ஸ் அண்ட் தி பாப்பர் (The Prince And The Pauper) ஞாபகம் இருக்கிறதா? அதில் அச்சு அசலாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இளவரசனுடைய மாளிகைக்கு ஏழையும், ஏழையின் குடிசை வாழ்க்கைக்கு இளவரசனும் இடம் மாறுவார்கள். இந்தக் கதையை உல்டா செய்து உலகம் முழுக்க விதவிதமாக படங்களை எடுத்துவிட்டனர். இப்படி காலகாலமாக எடுக்கப்பட்ட இந்த சப்ஜெக்ட்டின் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் அலா வைகுண்டபுரம்லோ என்ற தெலுங்குப் படம். இதில் டபுள் ஆக்ஷன் எல்லாம் இல்லை என்றாலும், வேறு சில பல புதுமைகளை சேர்த்து மாஸாக இயக்கியுள்ளார் த்ரிவிக்ரம் என்றால் மிகையில்லை.
சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் பணக்கார முதலாளியான ராமச்சந்திரனுக்கு பிறந்த குழந்தையின் இடத்தில், சூழ்ச்சி செய்து, தன் குழந்தையை இடம்மாற்றி வைக்கிறான் அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தாவான மிடில் க்ளாஸ் வால்மீகி. இதற்கு ஒரே சாட்சி குழந்தைகளை தொட்டில் மாற்றிய நர்ஸ். ஆனால் அவளை மாடியிலிருந்து கீழே தள்ளி கோமா ஸ்டேஜுக்கு விழச் செய்கிறான். அதன் பின் அந்த குழந்தைகள் எப்படி வளர்கின்றன என்பதை மிக சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியொரு மசாலாவான படத்தில் தரமான சுவையான பல சம்பவங்களைச் சேர்த்துள்ளதால்தான், இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்துவிடும்.
இந்தப் படத்தில் மூன்றுவிதமான அப்பாக்கள் உள்ளார்கள். ஒரு அப்பா (வில்லன்) தன் மகன் என்ன ஆசைப்பட்டாலும் அதை அப்படியே செய்து முடிப்பவர். இன்னொரு அப்பா (ஜெயராம்) தன் மகன் தன்னைப் போல கெட்டிக்காரனாக இல்லையே என்று வருந்தினாலும் அவனுடன் போராடி, கடைசி வரை அவனது திறமைகளை வளர்க்கச் சொல்லி பாடுபடுபவர். இன்னொரு அப்பா (முரளி ஷர்மா) மகனை மட்டம் தட்டி, சதா சர்வ காலமும் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பவர். அவனுடைய திறமைகளை ஒருபோதும் பாராட்டாமல், அவனிடம் சிறுது அன்பு கூட காட்டாமல் சுயநலமாக இருப்பவர். Our Great battles are with closest people - இந்தப் படத்தின் tag line இதுதான்.
இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் எப்படி இருக்கும்? அல்லு அர்ஜுனுக்கு பொருத்தமாக தமிழில் நடிக்கக் கூடியவர்கள் சிலர் இருந்தாலும், இந்தப் படத்தின் கதைக்கு 100 சதவிகிதம் பொருந்தக் கூடியவர் சிம்புதான். காரணம் சிம்புவின் அலட்டலான நடிப்பும் அசால்டான உடல்மொழியும், ராவான சிரிப்பும், அல்லுவின் ஸ்டைலிஷ் மற்றும் ஸ்மார்ட் ஆக்டிங்கு செம டஃப் தரும்.
காமெடி காட்சிகள், லவ் அண்ட் ரொமான்ஸ் சீன்கள், எமோஷனல் ஃபீலிங்க்ஸ் என இந்தப் படத்தில் சிம்பு பின்னி பெடல் எடுக்க ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உள்ளன. போதாதற்கு பன்ச் டயலாக் கூட படம் முழுவதிலும் அழகான வசனங்களாக தெறித்து வரும். ஜெயராம், சமுத்திரகனி, தபு, ஈஸ்வரி ராய், ரோகிணி என பல தமிழ் நடிகர்கள் நடித்திருப்பதால், இந்தப் படம் தமிழில் எடுக்கப்படும்போது அந்த ரோல்களில் அவர்களே நடிக்கலாம். இந்த படத்தின் சில காட்சிகளில் சிம்புவின் பங்களிப்பு இருந்தால் எப்படியிருக்கும் என்பதை சாம்பிளுக்குப் பார்க்கலாம்.
படத்தில் அல்லுவின் அப்பாவாக முரளி ஷர்மா நடித்திருப்பார். மனுஷன் எதார்த்த நடிப்பால் வில்லத்தனத்தை கண்களிலேயே காண்பித்துவிடுவார். தன்னுடைய கொடுக்கு (பிள்ளை) பணக்கார வீட்டில் வளர்கின்ற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் பணக்கார முதலாளியின் பிள்ளைக்கு பண்டி என்று மொக்கையான பெயர் வைப்பதில் தொடங்கி, அவனை கிட்டத்தட்ட அடிமை போல வளர்த்து வந்து வன்மம் தீர்ப்பார்.
மருந்துக்குக் கூட பண்டியிடம் அன்பாக பேசாமல் இதை செய் அதை செய் என்று ஆட்டிப் படைத்து, அவனது நியாயமான ஆசைகளை கூட மறுத்துவிடுவார். அதையும் மீறி அவன் அடம் பிடித்தால் நமக்கு எதுக்குப்பா இதெல்லாம், நாம மிடில் க்ளாஸ் என்ற வார்த்தையை அவன் தலைக்குள் புகுத்தி வைத்திடுப்பார். இந்த சூழலிலும் பண்டிக்கு ஆதரவாக இருப்பது அவனது அம்மா மற்றும் தங்கையின் அன்புதான்.
தனக்குக் கிடைத்த அந்த எளிமையான வாழ்க்கையை கூடுமான வரையில் நேர்மையாகவும்ம் சந்தோஷமாகவே வாழ்கிறான் அவன். குறை மட்டுமே சொல்லும் அப்பாவுக்கு முன்னால் எப்படியாவது ஜெயித்துக் காட்ட வேண்டும் என்றே ஆசைப்படுகிறான். வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்வது அவனது கனவு. அதனால் இண்டர்நேஷனல் டூர் கம்பெனி ஒன்றில் இண்டர்வ்யூவுக்குச் செல்ல, அந்த நிறுவனத்தின் சொந்தக்காரியான அமுல்யாவை (பூஜா ஹெக்டே) கண்டதும் காதல் வயப்படுகிறான்.
தன்னைவிட எல்லாவிதத்திலும் மிகப் பெரிய அந்தஸ்த்தில் அமுல்யா இருந்தாலும், மேடம் மேடம் என்று சொல்லிக் கொண்டே அவளது ஷார்ட் ஸ்கெர்ட்டில் தெரியும் தொடைகளை ரசிப்பதும், பெண்களையே பார்க்காதவன் போல உத்து உத்து பார்ப்பதும் அடிக்கடி கனவில் மிதந்து, சாரிகமா பதநி பாடுவதும், புட்ட பொம்மா புட்ட பொம்மா என டூயட் ஆடுவதுமாக அவனது பொழுதுகள் ஏக்கத்தில் கழிகிறது. ஆனாலும் தன்னுடைய நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாத வேதாளம் போல் விக்ரமான அம்முவின் தோள்களில் தொங்கியபடிதான் திரிகிறான் பண்டி.
அமுல்யாவின் மீதான காதல் காட்சிகளில் அல்லு அர்ஜுனின் அப்பாவியான முகபாவம் செம க்யூட்டாக அசத்திவிட்டார். சிம்புவை அந்தக் காட்சிகளில் தாராளமாக பொருத்திப் பார்க்கலாம். நிச்சயம் ரணகளம் செய்துவிடுவார். அதிலும் புட்ட பொம்மா பாடலுக்கான டான்ஸ் சிம்புவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. அல்லுவை ஓவர்டேக் செய்துவிடும் சாத்தியம் இருப்பதால் அசத்திவிடுவார் STR என்றுதான் தோன்றுகிறது.
இன்னொரு காட்சியில் பண்டிக்கு வால்மீகி தன் சொந்த அப்பா இல்லை, ராமச்சந்திரன்தான் (ஜெயராம்) உண்மையான அப்பா என்று தெரிய வரும். தான் வாழ வேண்டிய ஒரு ராஜ வாழ்க்கையை அப்பா என்ற பெயரில் சூழ்ச்சி செய்து ஒருவன் கெடுத்துவிட்டான் என்றபோதிலும் வளர்த்த பாசத்தில் அவரை மன்னிக்கிறான். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வளர்ப்பு அப்பாவை குத்தி காட்டுவதும், ப்ளாக் மெயில் செய்வதிலும் தவறுவதில்லை.
அதிலும் குறிப்பாக இருவரும் ஓரிரவு ஸ்கூட்டரில் போகும் போது வழக்கமாக பண்டிவை திட்டிக் கொண்டே வருவார் வால்மீகி. அப்போதுதான் நர்ஸ் மூலம் உண்மையை தெரிந்து கொண்ட பண்டி ஒரு கட்டத்தில் பொருக்க முடியாமல் வண்டியை நிறுத்தச் சொல்லி வால்மீகியை ப்ளார் என்று அறைந்து உலுக்கி எடுத்துவிடுவான். அப்பாவை அடிக்கலாமா என்று கேட்டால் இது போன்ற வில்லத்தனமான அப்பாவை தாரளமாக அடிக்கலாம் என்பதை புரிய வைத்திருப்பார் இயக்குனர். சிம்பு இந்தக் காட்சியில் செமயாக ஸ்கோர் செய்து ரசிகர்களை கலங்கடித்துவிடுவார். ஒரே சமயத்தில் காமெடியாகவும் எமோஷனலாகவும் இருக்கும் இதுபோன்ற காட்சிகள் படத்தில் ஏராளம்..
ஒரு காட்சியில் ஒரு மீட்டிங் நடக்கும். அதில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலையில் ராஜ் (வால்மீகியின் ஒரிஜினல் மகன்) மற்றும் பண்டி இருப்பார்கள். அந்தக் காட்சியில் ராஜ் செம போராக இருக்கு, ஏதாவது பண்ணேன் என்று அல்லுவைக் கேட்க, அதற்கு அவர் அட்டகாசமான பழைய தெலுங்குத் துள்ளல் பாடல்களை போட்டு அதற்கு ரீமிக்ஸ் செய்து ஆடுவது புதுமையிலும் புதுசு.
சிம்புவை அந்தக் காட்சியில் நினைத்துப் பாருங்கள். சிம்பு ரசிகர்களுக்கு வேற லெவல் என்ஜாய்மெண்ட் கியாரெண்டி. சின்ன சின்ன க்யூட் ரியாக்ஷன்ஸ், பூவை வாயில் கவ்விக் கொள்வது, மூன் வாக் டான்ஸ் என அல்லு அர்ஜுன் பண்டி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருந்தால், சிம்பு அதற்கு ஒரு படி மேலே போய்விடக் கூடியவர்தான் என்பதில் சந்தேகமில்லை.
ராமச்சந்திரனுக்கும் அவரது மனைவி (தபுவுக்கும்) பேச்சு வார்த்தை இல்லை என்பதை தூர இருந்து பார்க்கிறான். பெற்ற அம்மாவை தூரத்திலிருந்து பார்த்து ஏங்குவதாகட்டும், வளர்ப்பு அம்மாவின் பாசத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாகட்டும் மனுஷன் பண்டியாகவே வாழ்ந்திருப்பார். சிம்புவின் சேட்டைகளும், குறும்புத்தனமான வசனங்களும் நிச்சயம் ரசிகர்களுக்கு வேறொரு அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரிஜினல் படத்தைப் பார்க்காதவர்கள் சிம்புவின் நடிப்பில் இந்தப் படத்தை பார்த்தால் இது அவருக்காகவே டெய்லர் மேட் செய்யப்பட்ட ரோலாகத் தான் பார்ப்பார்கள். தெலுங்குப் படத்தை பார்த்தவர்கள் கூட பரவால்லையே நம்ம ஆளு தூள் கிளப்பிட்டாரு என்று மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ரீமேக் செய்கிறார்களோ இல்லையோ நம் மனத்தில் அவருக்கு பதில் இவர், என்று கட் காப்பி பேஸ்ட் செய்து படத்தை ஓட்டிப் பாருங்கள், இதுவும் ஒரு அனுபவமே!