மும்பையில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக நடிகையின் ஆபாச காட்சியை மேற்கோள்காட்டி இருவர் பதாகைகளை சுமந்து நின்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
பாலிவுட்டில் கடந்த ஆண்டு நடிகைகள் கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், சிகா தல்சானியா உள்ளிட்டோர் இணைந்து நடித்த ‘வீரே தி வெட்டிங்’ திரைப்படத்தில் 4 தோழிகளும் சேர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்வார்கள்.
ரியா கபூர், ஏக்தா கபூர் தயாரித்திருந்த இப்படத்தை சஷாங்கா கோஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கர் நடித்த ஆபாச காட்சி ஒன்றை தொடர்ந்து அவர் சமூக வலைதளங்களில் பிரபலமானார். அவரை டிரோல் செய்வதை சமூக வலைதளவாசிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள 71 மக்களவைத் தொகுதிகளில் 4ம் கட்டமாக நேற்று (ஏப்.29) தேர்தல் நடைபெற்றது. அப்போது மும்பையில், ஒரு ஆணும், பெண்ணும், வீரே தி வெட்டிங் படத்தில் ஸ்வரா பாஸ்கர் நடித்திருந்த ஆபாச காட்சியை மேற்கோள் காட்டி, பதாகைகளை ஏந்திக் கொண்டு தேர்தலில் வாக்களிக்குமாறு வலியுறுத்தினர்.
இது சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, நடிகை ஸ்வரா பாஸ்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் எனது டிரோல்கள் மறுபடியும் பிரபலமாகியுள்ளது. என் பெயரை பிரபலப்படுத்தியதில் மகிழ்ச்சி. இருவரும் அற்பணிப்போடு இதனை செய்துள்ளனர். இவர்களின் இந்த யோசனையை கேலி செய்யாமல் வாக்களிப்பதற்காக படத்தில் நான் நடித்த காட்சியுடன் ஒப்பிட்டிருப்பது பிரம்மிப்பாக உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.