இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை ஏற்று முத்திரை பதித்து வந்தார்.
பாலிவுட்டில் மட்டுமல்லாமல், பல்வேறு மொழி திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக அறியப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மிகவும் இளம் வயதில் அவர் மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் முதன் முதலில் ரசிகர்களுக்கு பரீட்சையமானது 'பவித்ரா ரிஷ்டா' என்ற ஹிந்தி சீரியல்மூலமாகத் தான். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' சீரியலின் ஹிந்தி ரீமேக்காகும்.
இதுகுறித்து கடந்த வாரம் தான் அதன் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்தின் நடிப்பை பாராட்டி பேசினார். அதில், ''எங்களது மற்றொரு நிகழ்ச்சியில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தவரை திருமதி செல்வம் ரீமேக்கில் முதன்மை வேடத்தில் நடிக்க திட்டமிட்டோம். ஆனால் எங்கள் ஜீ டிவியின் கிரியேட்டிவ் குழு அதற்கு சம்மதிக்கவில்லை.
அவரது சிரிப்பால் லட்சக்கணக்கான இதயங்களை வெல்வார் என்று எங்கள் டீமை ஒப்புக்கொள்ள செய்தோம். அது நடந்தது'' என்று சுஷாந்த் குறித்து பெருமிதம் தெரிவித்தார். அதற்கு சுஷாந்த், நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுஷாந்த்தின் மரணத்தை அடுத்து இதனை பகிர்ந்த ஏக்தா கபூர், ''ஒரு வாரத்தில் எல்லாமே மாறி விட்டது'' என்றும் வருத்தம் தெரிவித்தார்.