பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) நேற்று (ஜூன் 14) மும்பையிலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அவரது மரணம் குறித்த சந்தேகத்தை உறவினர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு மனிதரையும் வெற்றியை நோக்கி செலுத்துவது அவர்களது ஆசைகளும் கனவுகளும்தான். நடிகர் சுஷாந்த் சிங் தன் வாழ்க்கையில் சாதிக்க நினைத்தவை சிலவற்றை நிறைவேற்றிவிட்டாலும் இன்னும் சில நிறைவேறாத ஆசைகள் அவருக்கு இருந்துள்ளன.
சின்னத்திரையில் வெளிவந்த பவித்ரா ரிஸ்டா என்ற தொடர் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 2013-ம் ஆண்டில் அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான கை போ சே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். ஆனால் அதையடுத்து மூன்றாண்டுகள் கழித்து வெளியான எம் எஸ் தோனி- தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம்தான் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்தார்.
அவர் கடைசியாக நடித்த சிச்சோர் என்ற படமும் சரி தோனி படத்திலும் சரி வாழ்க்கையை எப்படி எதிர்நோக்க வேண்டும் என்றும் நினைத்ததை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் போன்ற கருத்துக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. இந்தப் படங்கள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தனது சொந்த வாழ்க்கையில் இன்னும் தொட நினைத்த உயரங்கள் இருந்தன. அவர் சில ஆண்டுகளுக்கு முன், தனது 50 ஆசைகளை ஒரு ரசிகரின் வேண்டுகோளின்படி தன் கைப்பட ஒரு வெள்ளைத் தாளில் எழுதிப் பட்டியலிட்டிருந்தார். தற்போது அது டிவிட்டரில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில ஆசைகள் மட்டுமே நிறைவேறியுள்ள நிலையில், சுஷாந்த் மரணம் அடைந்துவிட்டார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆசைகள் - விமானம் இயக்க வேண்டும், 100 குழந்தைகளையாவது இஸ்ரோ அல்லது நாஸாவில் நடக்கும் வொர்க்ஷாப்புகளுக்கு அனுப்ப வேண்டும்., ரயிலில் யூரோப் பயணம் மேற்கொள்ள வேண்டும், இடது கை ஆட்டக்காரராக கிரிக்கெட் விளையாட வேண்டும், Morse code கற்றுக் கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தர வேண்டும், பிரபல டென்னிஸ் வீரர் ஒருவருடன் ஒரு செட் கேம் விளையாட வேண்டும்.
ஜிம்னாஸ்டிக்ஸில் புது முயற்சிகள் செய்ய வேண்டும், வியன்னாவிலுள்ள செயிண்ட் ஸ்டேபென்ஸ் கதீட்ரல் சர்ச்சுக்கு ஒருமுறை போக வேண்டும், மெளண்ட் கைலாஷில் தியானம் செய்ய வேண்டும், எரிமலை வெடிக்கும் போது அதன் அருகில் ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும், ஆயிரம் மரங்களையாவது நட்டுவிட வேண்டும், விவசாயத் தொழில் கற்று அதில் ஈடுபட வேண்டும்,
லம்போர்கினி கார் வாங்க வேண்டும், சுவாமி வேவேகானந்தர் பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி ஃப்லிம் எடுக்க வேண்டும், இலவச புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும், ஒரு சாம்பியனுடன் செஸ் விளையாட வேண்டும், வில் வித்தை பயில வேண்டும், கிரியா யோகா கற்க வேண்டும், டிஸ்னி லேண்ட் போக வேண்டும் உள்ளிட்ட ஆசைகளை பட்டியல் இட்டுள்ளார்
இவற்றில் பாதி விஷயங்களை சுஷாந்த் நிறைவேற்றிய நிலையில், இன்னும் பாதி ஆசைகள் நிறைவேறாமலேயே உள்ளன. வாழ வேண்டிய வயசில் இத்தனை கனவுகளை அதுவும் சமூகம் சார்ந்த பல ஆசைகளை பாதியில் விட்டுவிட்டு சுஷாந்த் மறைந்தது அவரது நண்பர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஏன் தற்கொலை செய்யும் அளவுக்கு அவருக்கு என்ன நேர்ந்தது என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். குடும்பத்தினரும் இது கொலையாக இருக்கக் கூடும் என்று புகார் அளித்துள்ளனர்.
போலீஸ் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவரது மரணம் தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.