நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 14-ம் தேதி மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ரசிகர்கள் இன்னும் சோகமாக இருக்கும் நிலையில் அவரது துர்மரணத்துக்கான காரணங்களை அறிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நெருங்கிய நண்பர் ரியா சக்ரவர்த்தி இறுதி சடங்கிற்கு முன்னதாக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அவர் சுஷாந்த் சிங்கை காதலித்து வந்தார் என்று கூறப்படுகிறது. அவரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்ட நடிகை அங்கிதா லோகண்டே, சுஷாந்தின் இறுதிச் சடங்கிற்கு ஒரு நாள் கழித்து அவரது மும்பை இல்லத்தில் குடும்பத்தினரை சந்தித்தார்.
இந்த விசாரணையின் முதல் கட்டமாக சுஷாந்த் சிங் கடைசியாக அழைத்த தொலைபேசி எண்களுள் ஒன்று நடிகை ரியா சக்ரபர்த்தியின் எண். அவர் சில காலம் சுஷாந்த் சிங்கை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர். ஆனால் சாக முடிவெடுத்த பின் கடைசியாக அவரிடம் சுஷாந்த் பேச நினைத்திருக்கிறார். ஆனால் அவரது அழைப்பை ரியா எடுக்கவில்லை. இது குறித்து அவரை போலீஸார் விசாரணை செய்தனர். அவருடைய மொபைல் ஃபோனை தரோவாக செக் செய்துள்ளனர்.
இது குறித்து ரியா கூறுகையில், ‘சுஷாந்த் சிங் எனக்கு பிரியமானவர். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்து ஒரு வீடு வாங்க முயற்சித்தோம். 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டோம் ஆனால் நடுவில் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து விடோம். அந்த காலகட்டத்தில் எங்களிடையே நடந்த வாட்ஸப் மெசேஜ் எல்லாவற்றையும் போலீஸாரிடம் காண்பித்துவிட்டேன்.
சுஷாந்த் சிங் மன அழுத்தத்தில் இருப்பதை நான் உணர்ந்தேன். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று சற்றும் நினைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார் ரியா. போலீஸார் அவரிடம் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
மேலும் ரியாவின் மேனேஜர் ஸ்ருதி மோடி மற்றும் ராதிகா நிஹ்லானி ஆகியோரிடமும் போலீஸார் விசாரித்துள்ளனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நெட்ஃபிக்ஸ் திரைப்படமான டிரைவில் நடித்தார், அதற்கு முன்னால் அவர் சிச்சோர் மற்றும் சஞ்சிரியாவிலும் நடித்தார். சுஷாந்த் சிங்கின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் தில் பெச்சாரா, இது கொரோனா வைரஸ் லாக்டவுனால் ஒத்திவைக்கப்பட்டது. சுஷாந்தின் குடும்பத்தினர் ஒரு அறிக்கையில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையையும் படைப்புகளையும்" கொண்டாடுமாறு ரசிகர்களைக் கேட்டுக் கொண்டனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்