சென்னை: விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் பிரபல இயக்குநர் இணைந்திருக்கும் இனிப்பு செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி சிறப்பான பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான கொலைகாரன், காளி, திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தன. அந்த வகையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படமும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தமிழ் படம், தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கிய இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். எப்போதும் தனது படத்திற்கு வித்தியாசமான தலைப்புகளை வைத்து வெற்றி கண்டவர் விஜய் ஆண்டனி. அதே பாணியில் சி.எஸ். அமுதன் இயக்கும் படத்திற்கு ரத்தம் என பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தில், 3 நாயகிகளான மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி கமிட் ஆகியுள்ளார். இப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். பிரபல இசையமைப்பாளர் நடிக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் இசையமைப்பது இதுவே முதல் முறையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் D.இமான் உடன் இணைந்து பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என ஆறு படங்களில் சசீந்திரன் பணியாற்றியுள்ளார். 7 வது முறையாக இந்த கூட்டணி பிரமாண்ட பட்ஜெட் படத்தில் இணைந்துள்ளது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக தேர்வாகியிருப்பது மேலும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். படத்தின் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. முன்னதாக சுசீந்திரன் ஜெய்யை வைத்து இயக்கியுள்ள 2 படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டனி கைவசம் தமிழரசன், அக்னி நட்சத்திரம், கொலை, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் என அரைடஜன் படங்களை வைத்துள்ளார்.