நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் நேற்று (04.08.2022) நடைபெற்றது.
2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’வி0ருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், விருமன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் குறித்து பேசுகையில், "காவல் கோட்டம், வேல்பாரி உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர், எனது நண்பர் சு. வெங்கடேசன் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவரது எழுத்து, நம் தமிழர்களுடைய முக்கியமான அடையாளம்.
எல்லோரிடமும் எடுத்துச் சென்ற மிகச்சிறந்த படைப்பு. நாடாளுமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்கள் இங்கு வந்தது எங்களுக்கு கூடுதல் மதிப்பு. மதுரை மக்களின் குரல், தமிழ் மக்களின் குரல் எங்கு, எப்போது, எப்படி பதிவு செய்ய வேண்டுமோ! அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவருடன் சுவாரவசியமான பயணத்தை ஆரம்பித்துவிட்டோம். அது முக்கியமான பதிவாக இருக்கும். அது என்னவென்று இன்னொரு மேடையில் கூடிய விரைவில் கூறுகிறேன்" என சூர்யா கூறினார்.