ஒன்றிய அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றிலிருந்தே திரையுலக பிரபலங்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் மக்களின் கருத்தைக் கேட்கிறது ஒன்றிய அரசு. அதற்கு ஜூலை 2 வரை அவகாசம் வழங்கியிருந்தது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டால், ஒரு திரைப்படம் வெளியான பின்பும் அதுபற்றி யாராவது புகார் கொடுத்தால் அந்த புகாரின் அடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும். இந்தப் புதிய சட்டத்தின், பிரிவு 5பி(1)-ன் படி திரைப்படங்களை சான்றளிக்கும் சென்சார் வழிகாட்டுதலுக்கான கொள்கைகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், மத்திய அரசு அதனை திருத்துவதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் ஆகியோருடன் வெற்றிமாறன் உள்ளிட்ட சுமார் 1400 திரைப்பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், ஏற்கனவே, கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்த புதிய சட்ட திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் என குறிப்பிட்டிருந்தனர். மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் கண்டித்திருந்தனர்.
கள்ளத்தனமாக திரைப்படங்களை வெளியிடுவதால், திரையுலகிற்கும் அரசாங்கத்திற்கும் பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்றும், இதனை தடுக்கும் வகையில் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தம் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால், மத்தியில் இருக்கும் எந்த அரசும் தாங்கள் மக்கள் மீது திணிக்க விரும்புவதை திரைத்துறை மூலம் நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கக் கூடும் என்று படைப்பாளிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில்ல இன்று இச்சட்டத்தின் கருத்து கேட்பின் கடைசி நாள் என்பதால் நடிகர் சூர்யா, கமல் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். நடிகர் சூர்யா, “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” எனவும் நடிகர் கமல், “கண், வாய். காதுகளை அடைத்துக்கொண்டுள்ள இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களைப் போல் ஒரு போதும் சினிமா, ஊடகம், கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்க பார்த்தால் பெரிய பாதிப்பை உண்டாக்கும்” என்று தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இன்னும் பல பிரபலங்கள் ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். இன்றுதான் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கடைசி நாள் என்பதால் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.