நடிகர்கள் சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடித்த 'சூரரை போற்று' மற்றும் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமில் முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
அடுத்த 4 நான்கு மாதங்களான செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகின்றன. அவை வாணி போஜன், ரம்யா பாண்டியன் நடித்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே, சூர்யா நடிக்கும் ஜெய் பீம், அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடிக்கும் ஓ மை டாக் ஆகியன ஆகும்.
இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரில் மர்ம நபர்கள் போலியான இ மெயில் முகவரியை உருவாக்கி, சினிமா ஆர்வமிக்க நபர்களுக்கு மெயில் அனுப்பி, படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறியும், சினிமா சங்கங்களில் அடையாள அட்டை வாங்கி தருவதாக கூறியும், பணம் பறிப்பதாக 2டி நிறுவனம் சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"போலியான மெயிலை உருவாக்கி எங்களது 2டி நிறுவனம் பெயரை பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றி வந்ததை நாங்கள் அறிந்தோம். எங்களது நிறுவன பெயர் மற்றும் நிறுவன லோகோவை பயன்படுத்தி நடிகர் தேர்வு மற்றும் யூனியன் கார்டு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். 2டி நிறுவனத்தின் சார்பாக எந்த ஒரு ஆடிசன்களும் நேரடியாக நடத்தப்படுவதில்லை. எங்கள் 2டி நிறுவனத்தில் படம் இயக்கும் இயக்குனர்களே நேரடியாக ஆடிசன் வைத்து நடிகரை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் இதுபோல் போலியான ஆட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று 2d நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
மேலும் 2டி நிறுவன பெயர் மற்றும் லோகோவை முறைகேடாக பயன்படுத்துவதற்காக காவல்துறையில் அந்நிறுவனத்தின் சார்பில் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.