நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் நடைபெற்றது.

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், விருமன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு முன்பு, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர், வேட்டி சட்டையில் எடுத்த புகைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், நடிகர் சூர்யா பெயரை சொல்லி ரசிகர்கள் ஆரவாரம் செய்யவே, அதன் பின்னர் சூர்யா பேசியது தொடர்பான வீடியோ, ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. விருமன் படத்தில் நடித்துள்ள நடிகர் இளவரசு பேசிக் கொண்டிருந்த போது, சூர்யா பெயரை சொல்லி ரசிகர்கள் ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், தன்னால் மேடையில் நின்று பேச முடியாமல் போகவே, "தம்பி கொஞ்சம் எந்திருச்சு கை காமிங்கப்பா" என சூர்யாவை பார்த்து இளவரசு கூறினார்.
உடனடியாக, சூர்யாவும் எழவே, ரசிகர்கள் இன்னும் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர். தொடர்ந்து பேசிய சூர்யா, "உங்களுக்காக தான் வந்துருக்கோம். உங்க ஊருக்கு தான் வந்துருக்கோம். மேடையில் நானும், கார்த்தியும் வருவோம். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக அவங்களை பேச விடுவோம்" என சூர்யா கூறி, அமைதியாக இருக்க சூர்யா சைகை காட்டவே, ரசிகர்கள் ஆரவாரமும் குறைந்தது.