நடிகர் சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
தற்போது கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாக முடியாத நிலையுள்ளது. இந்நிலையில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''இந்த முடிவை நாங்கள் எதிர்கிறோம். 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் ஃபிளாட்பார்மில் வெளியானால், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது. திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும். பின்னர் தான் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாக வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பிரபல தயாரிப்பாளர் ஜேஎஸ்கே எனப்படும் ஜே.சதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள செய்தி மகிழ்ச்சி. சிறப்பு வாழ்த்துகள் 2டி எண்டர்டெயின்மென்ட்டுக்கும், சூர்யா சாருக்கும். படம் தயாரிப்பும் ஒரு வியாபாரம். அதில் தொழில் சுதந்திரம் தேவை. எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தயாரிப்பாளரின் முடிவே. நாங்கள் ஆதரிக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். அதற்கு 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜேசகர பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.