‘சிங்கம் 3’ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா மற்றும் ஹரி கூட்டணி மீண்டும் இணையவிருப்பது குறித்து நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘என்.ஜி.கே’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மல்டி ஸ்டாரர் படமான ‘காப்பான்’ திரைப்படம் வரும் செப்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது. மோகன்லால், ஆர்யா, போமன் இராணி, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சூர்யா தற்போது, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூரரை போற்று’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து, சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் இயக்குநர் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளன.
சீயான் விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’ திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்தப்படத்தின் கதையில் தீவிரம் காட்டி வரும் இயக்குநர் ஹரியுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதகாவும் தெரிகிறது.
'ஆறு', 'வேல்', 'சிங்கம்', 'சிங்கம் 2' மற்றும் 'சிங்கம் 3' ஆகிய படங்களைத் தொடர்ந்து 6வது முறையாக மீண்டும் சூர்யா - ஹரி சூப்பர் ஹிட் கூட்டணி மீண்டும் இணையவிருப்பது ரசிகர்களை மிகுந்த எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.