2020 ஆம் ஆண்டுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, புது டில்லியில் நேற்று (30.09.2022) நடைபெற்றது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் பலர் விருது பெற்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து மொழிப் பிரிவுகளிலும் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.
சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் பாண்டியன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் சூர்யா வென்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையில் இருந்து இந்த விருதை சூர்யா பெற்றார். இதனை அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா அரங்கில் இருந்து புகைப்படம் எடுக்கவும் செய்திருந்தார். இது தொடர்பான தருணங்கள், ரசிகர்கள் பலரையும் பெரிய அளவில் ஈர்த்திருந்தது.
இதனையடுத்து, தேசிய விருது வென்ற பின்னர், நடிகர் சூர்யா ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தனது தந்தை மற்றும் நடிகர் சிவகுமார், தாய், மகள், மகன் மற்றும் மனைவி ஜோதிகா ஆகியோருடன் குடும்பமாக தான் இருக்கும் புகைப்படத்தினை சூர்யா பகிர்ந்துள்ளார். மேலும், தேசிய விருதினை சிவகுமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அணிந்துள்ளனர். இத்துடன் தான் தேசிய விருது வாங்கும் புகைப்படத்தையும் பகிர்ந்த நடிகர் சூர்யா, "என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சுதா!!. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது அன்பான ரசிகர்களுக்காக" என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விருது வாங்கிய பிறகு குடும்பத்தாருடன் சூர்யா பகிர்ந்த ஃபோட்டோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.