2020 ஆம் ஆண்டுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, புது டில்லியில் நேற்று (30.09.2022) நடைபெற்றது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் பலர் விருது பெற்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து மொழிப் பிரிவுகளிலும் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.
சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் பாண்டியன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஓய்வு பெற்ற கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறைத் தழுவியும், அவரது கனவு திட்டமான குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கான் தொடங்கப்பட்டதன் பின்னணியும் இந்த படத்தில் கதைக்களமாக இடம்பெற்றன.
இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் சூர்யா வென்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையில் இந்த விருதை சூர்யா பெற்றார். இதனை அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா அரங்கில் இருந்து புகைப்படம் எடுக்கவும் செய்திருந்தார். இது தொடர்பான தருணங்கள், ரசிகர்கள் பலரையும் பெரிய அளவில் ஈர்த்திருந்தது.
தொடர்ந்து, தேசிய விருது வென்ற சூர்யாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது சூர்யாவுக்கு கிடைத்துள்ளாள் ஸ்பெஷலான வாழ்த்து ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சூரரைப் போற்று திரைப்படம், கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சூர்யா தேசிய விருது வென்றதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேசிய விருது அறிவிக்கப்பட்ட போது, சூர்யா பதிவிட்ட ட்வீட்டை பகிர்ந்த கோபிநாத், "சூர்யா - சுதா டீமிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்ன ஒரு அற்புதமான தருணம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் காணும் ரசிகர்கள் பலரும், தேசிய விருதுக்காக சூர்யாவுக்கு கிடைத்த வாழ்த்துக்களிலேயே இது தான் ஸ்பெஷலான ஒன்று என்றும் தெரிவித்து வருகின்றனர்.