2020 ஆம் ஆண்டுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, புது டில்லியில் இன்று (30.09.2022) நடைபெற்றது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், இயக்குனர் பிரிய தர்ஷன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் விருது பெற்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 சிலநாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து மொழிப் பிரிவுகளிலும் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.
சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் பாண்டியன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது.
ஓய்வு பெற்ற கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறைத் தழுவியும், அவரது கனவு திட்டமான குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கான் தொடங்கப்பட்டதன் பின்னணியும் இந்த படத்தில் கதைக்களமாக இடம்பெற்றன.
இத்திரைப்படம் சிறப்புத் திரைப்படப் பிரிவில் 5 முக்கிய விருதுகளை வென்றது. அதாவது:
● சிறந்த திரைப்படம்: சூரரைப் போற்று (தமிழ்); தயாரிப்பாளர்: 2டி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்; இயக்குனர்: சுதா கொங்கரா
● சிறந்த நடிகர்: சூரரைப் போற்று (தமிழ்); நடிகர்: சூர்யா
● சிறந்த நடிகை: சூரரைப் போற்று (தமிழ்); நடிகை: அபர்ணா பாலமுரளி
● சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (தமிழ்) திரைக்கதை எழுத்தாளர் (அசல்): ஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா
● சிறந்த பின்னணி இசை: சூரரைப் போற்று (தமிழ்) - ஜீ.வி.பிரகாஷ் குமார். ஆகிய 5 தேசிய விருதுகளை சூரரைப் போற்று வென்றது.
இந்நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் சூர்யா வென்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையில் இந்த விருதை சூர்யா பெற்றார்.
சூர்யாவுடன் மனைவி ஜோதிகாவும் தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.