ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.
சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ள இப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார்.
தமிழகத்தில் விழுப்புரம் - கடலூர் பகுதிகளில் 1990களில் பழங்குடி இருளர் இன இளைஞர்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறல் இப்படத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. இதேபோல், சாதிய ரீதியான ஒடுக்கமும், பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் இப்படத்தில் இரண்டாவது அடுக்காக சொல்லப்பட்டிருக்கும்.
நிஜமான சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நீதியரசர் சந்துருவை திரையில் கதாபாத்திரமாக சூர்யா பிரதிபலித்துள்ளார். ஆம், இதில் வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா, இப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களாக வரும் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகிய மக்களுக்கான நீதியை போராடி பெற்றுத்தருவார். மணிகண்டனை, போலீஸ் அதிகாரி குருமூர்த்தியாக வரும் தமிழரசன் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தும்போது ஏற்படும் சிக்கலே படத்தின் மையம்.
இதில் குருமூர்த்தியாகவரும் காவல் அதிகாரி தமிழரசன் மேலதிகாரியின் ப்ரஷர், பணத்துக்காக தான் செய்யும் தவறு, காவலர் என்கிற அதிகாரத் திமிர், உள்ளுக்குள் பிறப்பின் அடிப்படையில் இருளர் இன மக்களின் மீதான வன்மம் ஆகிய காரணிகளால் மணிகண்டனையும் அவரை சார்ந்தவர்களையும் பொய் வழக்கில் குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்வார்.
இதனிடையே படத்தில் நேரடியாக சாதிகளின் பெயர்கள் சில இடங்களில் சொல்லப்பட்டிருக்கும். பலரும் இதனை பாராட்டியுள்ளனர். ஆனால் சில இடங்களில், பயன்படுத்தப்பட்ட பின்னணி குறியீடுகள் குறிப்பிட்ட சாரரை தவறாக சித்தரிப்பதாகவும், குறிப்பிட்ட சாரரை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுந்தன.
குறிப்பாக படத்தில் தமிழரசன் போன் பேசும்போது, பின்னணியில் இருந்த காலண்டரில் இருந்த குறிப்பிட்ட சமூகத்தை பிரதிபலிக்கும் லோகோ சர்ச்சைக்குள்ளானது. மேலு,ம் “படத்தில் திருடனில் என்ன சாதி வேறுபாடு என்று சூர்யாவே ஒரு வசனம் பேசுவார். அப்படி இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வன்முறையாளராக சித்தரித்திருப்பது எப்படி சரி” என்கிற கருத்துக்களுடன் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தவிர, குருமூர்த்தி எனும் அந்த போலீஸ் அதிகாரியின் நிஜ பாத்திரம், வேறு ஒரு மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரின் பின்னணியில் இந்த சமூக அடையாளத்தை பிரதிபலிக்கும் குறியீடு வைக்கப்பட்டுள்ளதாக இருப்பதாகவும் எதிர்ப்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இந்த விவகாரம் பேசுபொருளாகி இருப்பதை அடுத்து அந்த குறியீடு மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு பெண் தெய்வத்தின் படம் பொருத்தப்பட்டு, ரீ-எடிட் செய்யப்பட்ட வடிவமே தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் ப்ளே ஆகிக் கொண்டிருக்கிறது.
இதனை அடுத்து இந்த குறியீடு நீக்கப்பட்டதற்கு, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களின் இயக்குநர் மோகன் ஜி , ஜெய்பீம் பட தயாரிப்பாளருக்கு நன்றி என்று தமது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஷான் ரால்டன் இசையில் உருவான இந்த படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் இப்படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார். ஜெய்பீம் படத்தின் கோர்ட் ரூம் டிராமா அனைவராலும் பாராட்டப்பெற்றது குறிப்பிடத்தக்கது.