சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் ஜெய்பீம்.
பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறலை மையமாகக் கொண்ட இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில், ஒளிபரப்பாகி வருகிறது.
படம் வெளியனதைத் தொடர்ந்து பழங்குடி இருளர் இன மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் சூர்யா, நேரடியாக 1 கோடி ரூபாய் நிதி அளித்திருந்தார். அதன் பிறகு பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளம் உட்பட பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருந்த ஜெய்பீம் பட நிஜ செங்கேனியான பார்வதி அம்மாளின் நிலை கண்டு, அவருக்கு வீடு கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, ஜெய்பீம் திரைப்படத்துக்கு வாழ்த்து கூறி இருந்த, இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தொடர் களப்போராட்டங்கள் மூலம் ஜெய்பீம் படத்தின் உண்மை நிகழ்வில் கிடைக்கப்பெற்ற நீதி தொடர்பாக குறிப்பிட்டு, நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் “ஜெய்பீம்.. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்” என்று குறிப்பிட்டிருந்த அவர், பார்வதி அம்மாவின் வாழ்வாதாரத்துக்கு நிதி உதவி அளிக்கும்படி கோரியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த நடிகர் சூர்யா, “பார்வதி அம்மா அவர்களின் பெயரில் 10 லட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதில் இருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அந்த தொகை போய்ச் சேரும்படி செய்யலாம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் வெற்றி பெற்றதற்கும், ராஜாக்கண்ணுவின் மனைவியான (நிஜ செங்கேனி) பார்வதி அம்மாளுக்கு 2D நிறுவனம் சார்பில் ₹15 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்கியதற்கும் நடிகர் சூர்யாவை நேரில் சென்று CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளனர்.