NATIONAL AWARD 2021: பிறந்தநாள் பரிசாக தேசிய விருதுகள்.. நெகிழ்ச்சியில் நன்றி சொன்ன சூர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறந்த திரைப்படங்கள் மற்றும் சினிமா கலைஞர்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள்  டெல்லியில் மத்திய அரசு சார்பில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவில், சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

அறிமுக இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருந்த 'மண்டேலா' திரைப்படம், சிறந்த வசனம், சிறந்த அறிமுக இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.

வசந்த் இயக்கி இருந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பிராந்திய மொழி திரைப்படம் என மொத்தம் 3 தேசிய விருதுகளை, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்  வென்றுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு நன்றி கூறி உள்ளார். அதில்,"வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு   ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது  பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு  இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா - ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி,  இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.  

மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  

’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.. 

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..
" என அந்த அறிக்கையில் சூர்யா கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya about National Film Award and Soorarai Potru Maniratnam

People looking for online information on National awards, National Film Awards, Soorarai Potru, Sudha Kongara, Suriya, Vasanth will find this news story useful.