சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ‘தலைவர் 168’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘தலைவர் 168’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தினை ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்துடன் சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைத்துள்ளது. இப்படத்தின் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.