மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், தனது கவிதாலயா புரொடக்சன்ஸ் சார்பில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வந்தார். அதில் 'நெற்றிக்கண்', 'புன்னகை மன்னன்', 'அண்ணாமலை', முத்து, 'சாமி', திருமலை உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில் 'நெற்றிக்கண்' படத்தை தனுஷ் நடிப்பில் ரீமேக் செய்யவுள்ளதாக தற்போது தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இயக்குநரும் நடிகருமான விசு தனது கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கவிதாலயா புரொடக்சன்ஸ் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை.
நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது.
மேலும், விசு அவர்கள் கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும்,முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்'' இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.