இசையமைப்பாளராக சர்வதேச அளவில் பிரபலமானவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த 'ரோஜா' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், அதன்பின்னர் பலமுறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பல படங்களில் பணிபுரிந்த ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரைக்கும் சென்று ஆஸ்கர் விருதினையும் வென்றதுடன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார்.
இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன போதும் தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டும் வருகிறார். சமீபத்தில் கூட இரவின் நிழல், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, கோப்ரா என ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி, '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம் மூலம் திரைப்பட எழுத்தாளராகவும் அறிமுகமாகி இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும், 99 சாங்ஸ் படத்திற்கு, இசையமைத்து தயாரிக்கவும் செய்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.
இதனைத் தொடர்ந்து, இசை, கதை என்பதைத் தாண்டி, இயக்குனர் அவதாரத்தையும் எடுத்திருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். 'லி மஸ்க்' (Le Musk) என்னும் 36 நிமிடம் ஓடக் கூடிய திரைப்படம் ஒன்றை ரஹ்மான் இயக்கி உள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில், லி மஸ்க் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், நோரா அரனிசாண்டர், கை பர்னெட் ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு திரையிடல் மூலம் கண்டு களித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.