நடிகரும் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டாரும் இந்திய பிரபல நடிகருமான ரஜினிகாந்த், இன்று தன்னுடைய 72-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்படும். ஸ்டைலிஷ் மற்றும் கமர்சியல் நடிகராக தமிழ் திரை உலகில் 70-கள் தொடங்கி முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் சிவா இயக்கி இருந்த இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. டி.இமான் இந்த திரைப்படத்துக்கு இசை அமைத்திருந்தார். இதில் ரஜினியுடன் 80 மற்றும் 90-களில் நடித்த மீனா, குஷ்பு ஆகிய நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, ஹீரோயிஸம், வில்லத்தனம் உட்பட நடிகர் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி திரை, அரசியல் என பலதரப்பட்ட முனையிலும் இருந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினும் தம்முடைய பிறந்த நாள் வாழ்த்தினை ரஜினிகாந்த்துக்கு உரித்தாக்கியுள்ளார்.
இது தொடர்பான தம்முடைய ட்வீட்டில், “உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.” என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
1975-ல் மறைந்த இயக்குனர் கே பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த். பின்னர் தமது 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்த, நடிகர் ரஜினிகாந்த் உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர். இதனிடையே இந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறையின் உயரிய சாதனை விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த 72-ஆவது பிறந்தநாளில், TNPSC நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளைகள் மூலம் சமூகத்தின் ஏழை மற்றும் விளிம்புநிலை வகுப்பைச் சேர்ந்த 100 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இந்த தகவலை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்தின் பிறந்த நாளில் அவரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் அட்வகேட்.எம். சத்ய குமார் LLB,ACA ACMA, ACS, CIMA-ACMA(UK), CGMA(US) CA. மற்றும் எம். சூர்யா LLB, ACA, ACMA,CS ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.