பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஆரோக்கியமான பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அச்சம் இருந்தாலும் தமிழகத்தில் மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு படையலிட்டு வழிபட்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மண்ணின் மனத்துடனும் இன்று கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல்
தை திங்கள் முதல் நாளான இன்று, தை மகளை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகத்துடன் அதிகாலையில் எழுந்து வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் சூரியனை வணங்கி, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். காலை நேரத்திலேயே பலர் கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றனர்.
கொரோனா
கொரோனா பரவல் அச்சம் இருந்தாலும் தமிழகத்தில் மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி தமது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களிலும் சரி, பாட்டாக இருந்தாலும் சரி உழவர்களை மேலோங்கியே பேசுவார். அதற்கு எடுத்துக்காட்டாய் பல பாடல்கள் உள்ளன. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனங்களும் அவ்வாறே இருந்தது. பொங்கல் பண்டிகையை தமிழர்கள் எவ்வாறு கொண்டாடி மகிழ்வார்கள் என்பதை நன்கு அறிந்தவர் ரஜினிகாந்த்.பொங்கல் பண்டிகை தினத்தில் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
ரஜினி ட்வீட்
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டுருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருகக்கும் என்னுடைய பொங்கல் தின நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.